பக்கம் எண் :

சீறாப்புராணம்

381


முதற்பாகம்
 

993. கலைநிறை மதியாய் மடிமிசை யிருப்பக்

        கனவுகண் டகமகிழ் கதீசா

    நிலைமிசை யிவர்க்கே மனைவியா யிருந்திந்

        நீணிலம் புரப்புது தவறில்

    குலமிகப் பெருகுஞ் செல்வமும் வளருங்

        குறைவிலாப் பதவியும் பேறு

    மலகிலா தடைந்த தென்னவு முரைத்தே

        னெனவரி வையர்க்குரை யென்றான்.

27

     (இ-ள்) சோடசகலைகளும் நிறையப் பெற்ற பூரணச் சந்திரனாய் மடியின் மேலிருந்து தவழும்படி சொப்பனங் கண்டு மனமகிழ்ச்சியடைந்த அக்கதீஜா நாயகமவர்கள் இப்பூமியின்மீது இந்த முகம்மதென்பவருக்கே மனையாளாக இருந்து இந்த நீண்ட நிலத்தைக் காப்பது தப்பாது. அன்றியும், அந்தக் கதீஜா அவர்களின் குலமும் மிகவாய்ப் பெருகும். சம்பத்தும் அதிகரிக்கும் அவர்கள்பால் குறைவற்ற மோட்ச பதவியும் பேறும் கணக்கில்லாது வந்து சேர்ந்த தென்றும் நான் சொன்னே னென்று அந்தக் கதீஜா நாயக மவர்களுக்குச் சொல்லென்று சொன்னான்.

 

994. மறைதெரி யறிவ னுரைத்தசொற் கேட்டு

        மைசறா மனமிக மகிழ்ந்து

    நிறைபதி தனைவிட் டிற்றைநாள் வரைக்கு

        நிகழ்ந்தகா ரணமுள வனைத்துங்

    குறைவிலா தெழுதி முத்திரை பொருத்திக்

        குறித்தவ னிடத்தினிற் கொடுத்துக்

    கறையிலா மதிய மெனுமயில் கதீசா

        கரத்தினி லளித்திடு மென்றான்.

28

     (இ-ள்) வேதங்களைக் கற்றுணர்ந்த அறிவினையுடைய அவ்வூசாவென்னும் பண்டிதன் அவ்வாறு சொல்லிய வார்த்தைகளை மைசறாவென்பவன் தனது காதுகளினாற் கேள்வியுற்று மிகவும் மனமகிழ்ச்சியடைந்துப் பல செல்வங்களினாலும் பூரணப்பட்ட தங்களது நகரமாகிய மக்காப்பகுதியை விட்டுவந்த நாள்முதல் ஊசாவைக் கண்ட நாள் வரைக்கும் இடையில் நடைபெற்ற காரணத்தையுடைய எல்லா அதிசயங்களையும் யாதொரு குறைவுமில்லாது எழுதிமடித்து அதன்மேல் முத்திரையும் பொருந்தும்படி செய்து தனது மனதில் மதிப்பிட்ட ஒருவரிடத்தில் கொடுத்துக் குற்றமற்ற சந்திரனென்னும் மயில்போன்ற சாயலையுடைய கதீஜாநாயக மவர்களின் கைகளிற் கொண்டு போய்க் கொடுத்திடு மென்று சொல்லி அனுப்பி வைத்தான்.