பக்கம் எண் :

சீறாப்புராணம்

382


முதற்பாகம்
 

995. விண்ணபத் திரத்தை மக்கமா நகரில்

        விளங்கிழைக் கனுப்பிய பின்னர்

    பண்ணினிற் சிறந்த மறைமுறை தேர்ந்த

        பண்டிதன் பதமலர் போற்றி

    வண்ணவார் தடக்கை முகம்மதைப் புகழ்ந்து

        வாகனங் கொணர்ந்தனன் மைசறா

    வெண்ணிறந் தனைய மக்கிக ளெவரு

        மெழுந்தனர் குரிசிலு மெழுந்தார்.

29

     (இ-ள்) மைசறாவென்பவன் அவ்வாறு அந்த விண்ணப்பப்பத்திரத்தைத் திருமக்கமா நகரத்தில் பிரகாசியா நிற்கும் ஆபரணங்களையுடைய கதீஜாநாயக மவர்களுக்கு அனுப்பின பின்னர், இசைகளினாற் சிறப்புத் தங்கிய வேத ஒழுங்குகளைக் கற்றுதெளிந்த பண்டிதனாகிய அவ்வூசாவென்னும் முதியவனின் பாத தாமரைகளைத் துதித்து அழகிய நீட்சி பொருந்திய பெரிய கையினையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைப் போற்றி அவர்கள் ஏறிச் செல்லும் ஒட்டகத்தினை அங்கு கொண்டு வந்தான். அப்போது கணக்கில்லாத கூட்டமாகிய மக்கமாநகரத்தை யுடையவர்களான வியாபாரிகளெல்லாவரு மெழும்பினார்கள். அதோடு குரிசிலாகிய நபிகள் பெருமானவர்களு மெழும்பினார்கள்.

 

996. பாதையிற் புகுத மூதறி வுணர்ந்த

        பண்டித னெனவரு மூசாத்

    தீதற வெழுந்து முகம்மதின் வனசச்

        செம்மல ரடியிணை பணிந்து

    கோதறப் பழுத்த செழுங்கனி கொடுத்துக்

         கொண்டலங் கவிகையை நோக்கி

    மாதவர் தமையு மடிக்கடி போற்றி

         மகிழ்ந்துதன் மனைவயிற் சார்ந்தான்.

30

     (இ-ள்) அவ்விதம் அவர்களியாவர்களு மெழும்பிப் பாதையின்கண் போய்ச் சேர, முதுமையான அறிவுகளெல்லா வற்றையுங்கற்றுத் தெளிந்த பண்டிதனென்று வராநிற்கும் அவ்வூசாவென்பவன் குற்றமில்லா தெழும்பி நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் சிவந்த தாமரை மலர்போலும் இருபாதங்களிலும் வணங்கிச் சக்கையறப் பழுத்த செழியகனி வர்க்கங்களைக் கொண்டுவந்து கொடுத்து அவர்களுக்கு ஆகாயத்தின்கண் இடாநிற்கும் அழகிய மேகக்குடையைத் தனது இருகண்களினாலும் பார்த்து மகாதவத்தையுடையவர்களான அந்நபிகள் பெருமானவர்களை அடிக்கடி வாழ்த்தி மனமகிழ்ச்சிக் கொண்டு தனது வீட்டினிடத்தில் போய்ச் சேர்ந்தான்.