பக்கம் எண் :

சீறாப்புராணம்

393


முதற்பாகம்
 

வாசனைப் பெற்ற மலர்மாலையணிந்த தோள்களையுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அழகிய பெருமை தங்கிய மதிலானது சூழ்ந்த தெய்வீகமுற்ற திருமக்கமா நகரத்தின் வீதியில் வராநின்ற பவனியானது பொருந்திய கனவின் முன்னதாகவே தாங்கள் எண்ணிய துன்பமென்னும் சமுத்திரத்தினக மாயினார்கள்.

 

1017. மலைநிகர் புயமுகம் மதுநன் மாமணத்

     துலவிய பவனியின் கனவொன் றுற்றிடக்

     கலைமதி நிகர்கதீ சாதங் காதலா

     லலைதுயர்ப் பெருக்கினி லாழ்ந்திட் டாரரோ.

21

     (இ-ள்) அன்றியும், மலைபோலும் தோள்களையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் நல்ல பெருமை தங்கிய விவாகக்கோலத்துடன் உலாவப் பெற்ற பவனியையுடைய ஒரு சொப்பனமானது பொருந்திடவே, சோடச கலைகளையுமுடைய பூரணச் சந்திரனுக்குக் கொப்பாகிய கதீஜாநாயகமவர்கள் மனசினுள் ளமந்த காதலினால் அலைவினையுடைய துன்பமென்னும் சமுத்திரத்தின்கண் ஆழ்ந்தார்கள்.

 

1018. துதிபெறுங் குவைலிது கருத்துத் துன்புறப்

     பதியர்பே தகப்படப் பகர்வ ரோவெனு

     மதிநிகர் முகம்மதின் மனைவி யாகவென்

     விதிவசம் பொருத்துமோ விலக்கு மோவெனும்.

22

     (இ-ள்) அவ்விதம் மூழ்கிய கதீஜாநாயகமவர்கள் கீர்த்தி பெறா நிற்கும் நமது தந்தையாகிய குவைலீதென்பவரின் சிந்தையானது துன்பத்தைப் பொருந்தும் வண்ணம் நாமிருக்கும் இக்கோலத்தைக் குறித்து இந்தத் திருமக்கமா நகரத்திலுள்ளவர்கள் வேற்றுமைப்படும்படி யாதேனும் சொல்லுவார்களோ? என்று சொல்லுவார்கள். பூரணச்சந்திரனுக் கொப்பாகிய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் மனையாளாய் நானாகும்படி எனது விதியினது அமைப்புப் பொருந்தச் செய்யுமோ? அல்லது விலகச் செய்யுமோ? நானறியே னென்று சொல்லுவார்கள்.

 

1019. மடிமிசை மதிவரும் வரவு மாமறை

     நெடியவன் மணமென நிகழ்த்தும் வார்த்தையுங்

     கடிமணப் பவனியின் கனவு மாதுலன்

     றிடமுறும் வசனமுஞ் சிதையு மோவெனும்.

23