பக்கம் எண் :

சீறாப்புராணம்

395


முதற்பாகம்
 

வரவும் பார்த்திலோம். அக்கினியைப் போலும் சுடா நிற்கும் காட்டிலுள்ள பாலை நிலத்தின்கண் வைத்து நடந்த செய்தி முதலிய யாவும் எமக்குத் தெரியவுமில்லை யென்று சொல்லிப் பிரமித்து வாடுவார்கள்.

 

1023. விம்முறு மேங்குமெய் வருந்தும் வெய்துயிர்த்

     தம்மவோ வெனுமுளத் தடக்கி யாழ்கடன்

     மம்மரைக் கடப்பதெவ் வகைகொ லோவெனச்

     செம்மலர் முகங்கரிந் திருந்து தேம்புமே.

27

     (இ-ள்) அன்றியும், விம்முதலடைவார்கள் ஏக்கங்கொண்டு உடலானது வருத்தமுறுவார்கள். நெடுமூச்சுவிட்டு அம்ம! ஓ! னுன்று சொல்லுவார்கள். அகாதமான சமுத்திரத்தைப் போன்ற காமாசையை மனசின்கண் அமையும்படி செய்து அதை விட்டும் நாம் தாண்டிச் செல்லுவது எவ்வுபாயத்தினா லென்று சிவந்த தாமரைமலர் போன்ற முகம் கரிதலுற்று இருந்து மெலிவார்கள்.

 

1024. மன்னவன் குவைலிது வரத்திற் றோன்றிய

     பொன்னிளங் கொடிவிழி பொருந்தி லாதிருந்

     தின்னன துயரமுற் றெண்ணி யேங்கியே

     தன்னுளத் தடக்கிமெய் தளருங் காலையில்.

28

     (இ-ள்) அரசனான குவைலீ தென்பவனின் வரத்தினால் உதயமாகிய இளம்பருவத்தையுடைய பொற்கொடிபோலும் கதீஜாநாயகமவர்கள் இரண்டு கண்களும் பொருத்தமுற்று நித்திரை செய்யாமலிருந்து இந்தப் படியாகத் துன்பத்தைப் பொருந்தி எண்ணங்கொண்டு ஏக்கமடைந்துத் தனது இருதயத்தின்கண் அமையும் வண்ணம் செய்து உடலானது தளர்ச்சி பெறும் சமயத்தில்.

 

1025. வழுவற நன்மொழி யெடுத்து மைசறா

     வெழுதிய பத்திர மடைந்த தின்றெனச்

     செழுமலர்க் குழலிய ருரைப்பத் தேமொழி

     விழைவொடுங் கரத்தினில் விரைந்து வாங்கினார்.

29

     (இ-ள்) செழிய புஷ்பமாலையணிந்த கூந்தலையுடைய தாதிப் பெண்கள் இன்றையத்தினம் மைசறாவென்பவன் யாதொரு குற்றமுமில்லாத நல்ல வார்த்தைகளை எடுத்துத் தீட்டிய கடிதமொன்று இங்கு வந்து சேர்ந்ததென்று சொல்ல, அக் கடிதத்தைத் தேன்போலும் இனிய வசனங்களையுடைய கதீஜா நாயகமவர்கள் ஆசையோடும் விரைவாகத் தங்களது கைகளினால் வாங்கினார்கள்.