பக்கம் எண் :

சீறாப்புராணம்

40


முதற்பாகம்
 

(இ-ள்) அன்றியும், கருநிறத்தைக் கொண்ட அஞ்சன மெழுதப்பெற்ற கண்களையுடைய மாதர்களின் அழகிய கூந்தலாகிய வனத்தில் மதுவைப் பொழிகின்ற மெல்லிய புஷ்பங்கள் மகரந்தங்களைச் சிந்தியவை, பிரகாசந் தங்கிய மின்னலானது விரிதலுற்ற மெல்லிய நூலிற் கோத்த ஆபரணங்களோடு பல ஆபரணங்கள் நெருங்கிப் பொருந்தித் தேய்வதிற் பொற்றூள்கள் சொரிவனவற்றை நிகர்த்தது.

 

71. பிடித்த கொம்பிருந் தோடிமுட் குடக்கனி பிடித்துக்

   கடித்த போதினிற் காம்பறக் கனியுடன் கவியும்

   படித்த லத்தினில் வீழ்ந்திடப் பதறிமெய் பதைத்துத்

   துடித்துத் தன்னுயிர்க் கடுவனை யணைத்துட றுணுக்கும்.

51

      (இ-ள்) அன்றியும், தான் பிடித்த கொப்பிலிருந்து ஒடி முட்களைக் கொண்ட குடத்தை நிகர்த்த பலாப்பழத்தைக் கைகளிற்பிடித்துப் பற்களினாற் கடித்த சமயத்தில் அதன் காம்பானது அற்றுப் போக அப்பழத்துடன் பெண் குரங்கும் பூமியின் கண் விழுந்து திடுக்கிட்டுச் சரீரமானது நடுங்கித் துடித்துத் தனது ஜீவனை நிகர்த்த ஆண் குரங்கைத் தழுவித் தேகமானது பயமடையா நிற்கும்.

 

72. தாறு கொண்டபைங் கதலிதே மாப்பலாத் தருத்தே

   னூறு கொண்டசெங் கனிசிறு கிடங்கிடை யுகுப்பச்

   சேறு கொண்டதிற் கிடந்திருள் செறிகரு மேதி

   வேறு கொண்டுபொன் மேதியின் குலமென விளங்கும்.

52

      (இ-ள்) அன்றியும், சிறிய வாவிகளினிடத்து குலையைக் கொண்ட பசிய வாழை, தித்திப்பையுடைய மா, பலாவாகிய மரங்கள் தேனினது சுரப்பைப் பெற்றச் சிவந்த பழங்களைச் சொரிய அதனாற் சேற்றைக் கொண்ட அதிற் கிடந்து அந்தகாரம் நெருங்கிய கருநிறத்தையுடைய எருமை மாடானது வேற்றுமையையடைந்து பொன்னெருமையின் குலத்தைப் போல விளங்கா நிற்கும்.

 

73. கள்ள விழ்ந்தபூம் பொய்கையிற் புள்ளினங் கலையத்

   துள்ளு மேல்வரிக் கயலுண்டு நாரைகண் டூங்கு

   முள்ள மன்புறச் சேவலின் சிறைநிழ லொதுங்கி

   வெள்ள ளப்பெடை தாமரைத் தவிசில்வீற் றிருக்கும்.

53

      (இ-ள்) அன்றியும் நாரைகளானவை மதுவானது அவிழப் பெற்ற மலர்களையுடைய வாவிகளில் பட்சியினது கூட்டங்கள் கலையும் வண்ணம் மேலே துள்ளுகின்ற இரேகைகளையுடைய கெண்டமீன்களைப் புசித்து நித்திரைசெய்யும்.