|
முதற்பாகம்
போற்றா நிற்கும்
அழகிய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமென்று மகத்தாகிய பெரிய இந்தப் பூலோகத்தினகம்
உதயமாகி மானுஷீக வடிவத்தைக் கொண்ட நாயகரவர்களின் அதிசயங்களெல்லாவற்றையும் நானெடுத்துச்
சொல்லுவதற்கு எனக்கு நான்குலட்சம் நாவுகள் உண்டாயிருக்குமேயானால் அவற்றில் கொஞ்சம் அந்நாவுகளினால்
சொல்லுவேனென்று சொன்னான்.
1045.
மரைப்பதம் வழுத்தி
யன்னோர் வாய்மொழி மறாது நின்றோர்
திரைப்பெரும்
புவியின் மேலோர் செல்வமே பெறுவர் கேளார்
நிரைப்பெரு நரக
மாழக் கெடுவர்நீ ணிலத்தி லென்னா
லுரைப்பதென்
சிறியேன் றீட்டு மோலையே யுரைக்கு மென்றான்.
12
(இ-ள்) அன்றியும், அந்த நபிமுகம்மது
முஸ்தபாறசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் தாமரை மலர்போலும் இருபாதங்களையும் துதித்து
அவர்களின் வாயின் கண்ணிருந்து உதயமாகாநிற்கும் வார்த்தைகளை மறுக்காமல் நின்றவர்கள் சமுத்திரஞ்
சூழப்பெற்ற இப்பூமியின் கண்ணுள்ள மேலானவர்களின் சம்பத்தையடைவார்கள். அவ்வார்த்தைகளைக்
கேளாதவர்கள் வரிசையாகிய பெரிய நரகத்தில் முங்கும் வண்ணம் கெட்டுப் போவார்கள். அல்லாது
நெடிய இவ்வுலகத்தில் என்னால் சொல்லக் கூடியது என்னை? சிறியனாகிய யான் எழுதிய பாசுரமே
சொல்லுமென்று சொன்னான்.
1046.
மரவமுங் கியபொற்
றிண்டோண் முகம்மது வரவு கண்டேன்
கரையிலாக் காட்சி
கண்டேன் காசினி தோயாப் பாதம்
பிரிவுறாப் பதவி
கண்டேன் பெண்களுக் கரசே யின்றுந்
திருவடி கண்டேன்
காணாச் செல்வமொன் றில்லை யென்றான்.
13
(இ-ள்) அன்றியும், பெண்களுக்கெல்லாம்
அரசராகிய கதீஜா நாயகமே, குங்குமப் புஷ்பத்தினாலான மலர்களை முங்கப் பெற்ற திண்ணிய
புயங்களை யுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் வரவைப் பார்த்தேன்.
மேலும் எல்லையில்லாத அற்புதங்களைப் பார்த்தேன். பூமியின்கண் தங்காத பாதங்களினது வேற்றுமையற்ற
பதவியைப் பார்த்தேன். இன்றையதினம் உங்களுடைய தெய்வீகமுற்ற சரணங்களைப் பார்த்தேன். இனியான்
பாராத செல்வமானது யாதொன்று மில்லையென்று சொன்னான்.
|