|
முதற்பாகம்
1047.
தெண்டிரைப் புவன
மேழுஞ் சேந்தபொன் னுலக மெட்டுங்
கொண்டுதன் னேமி
யொன்றாற் கொற்றவெண் குடையு ளாக்கி
வண்டணி துதையுந்
தண்டார் முகம்மதே புரப்பர் தேனுங்
கண்டுமொத் தனைய
சொல்லாய் காண்பது திண்ண மென்றான்.
14
(இ-ள்) அன்றியும்,
தேனும், கற்கண்டும் ஒன்றாய்ப் பொருந்திய போன்ற வார்த்தைகளை யுடைய கதீஜா நாயகமே தேனீக்கள்
வரிசையாக நெருங்கா நிற்கும் குளிர்ச்சி பொருந்திய மலர்மாலை யணிந்த தோள்களை யுடைய நாயகம்
நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களே தெள்ளிய அலைகளைக் கொண்ட சமுத்திரஞ் சூழப்பெற்ற
இந்த ஏழு பூமிகளையும் சிவந்த எட்டுச் சுவர்க்கலோகங்களையும் தங்களினது ஏகச்சக்கரத்தினாற்
கொண்டு வெள்ளிய கொற்றக் குடையினகமாகும்படி செய்து ஆட்சி செய்வார்கள் அதை நாம் நமது கண்களினாற்
பார்ப்பது நிச்சயமென்று சொன்னான்.
1048.
கடிகமழ் மரவத் திண்டோட்
காளைதம் புதுமை யாவும்
வடிவுறத் தெளிந்து
தேர்ந்த மைசறா வுரைத்த மாற்றம்
படிபுகழ் கதீசா மெய்யிற்
பசலைபூத் தெழுந்த காமக்
கொடிபடர்ந் தேற
நாட்டுங் கொழுங்கொம்பு போன்ற தன்றே.
15
(இ-ள்) அவ்வாறக வாசனை பரிமளியா நிற்கும்
குங்குமப் புஷ்பத்தினாலான மலர்மாலையணிந்த திண்ணிய புயங்களைக் கொண்ட காளைப் பருவத்தை யுடைய
நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் அதிசயங்க ளெல்லாவற்றையும் அழகுறும்படி
தெளிந்துணர்ந்த அந்த மைசறா வென்பவன் சொல்லிய சொல்லானது இவ்வுலக முழுவதும் துதியாநின்ற
கதீஜாநாயக மவர்களினது சரீரத்தில் பசலை பூத்தெழும்பிய காமமாகிய கொடியானது பரவி ஏறுவதற்கு நாட்டிய
செழிய கொம்பை நிகர்த்தது.
1049.
மனையினுக்
குயிராய் வந்த மைசறா வுரைத்த மாற்றஞ்
சினவுவேற் கருங்கட்
பாவை செவிநுழைந் தகத்திற் புக்கி
நனிதுய ரூறு தொட்டு
நதிப்பெருக் காக்கிப் பின்னுங்
கனைகடல் விரிவ
தாக்கிக் கதித்தெழப் பெருக்கிற் றன்றே.
16
(இ-ள்) அன்றியும், தங்களினது வீட்டிற்கு
ஜீவனாக வந்து சேர்ந்த அம்மைசறா வென்பவன் சொல்லியசொல்லானது, சத்துராதிகளின் மேற்
கோபியாநிற்கும் வேலாயுதம் போன்ற கரிய கண்களையுடைய பாவையாகிய கதீஜா நாயகமவர்களின்
|