பக்கம் எண் :

சீறாப்புராணம்

412


முதற்பாகம்
 

1069. மன்னர்மன் சொற்கேட் டந்த மைசறா தன்னைக் கூவித்

     தன்னக மடைந்தன் பாகத் தனித்துவைத் துள்ளத் துற்ற

     நன்னய மொழிக ளியாவு மறையினி னவிற்று கென்னப்

     பொன்னெடுத் துரைத்த தென்னப் புகன்றெடுத் துரைக்க லுற்றான்.

36

     (இ-ள்) அப்போது அபீத்தாலிபவர்கள் இராஜாதிபர்களான நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் வார்த்தைகளை இரு காதுகளினாலுங் கேள்வியுற்று அந்த மைசறா வென்பவனை அழைத்துத் தங்களது வீட்டின்கண் போய்ச் சேர்ந்து அன்போடும் அவனை ஏகமாக இருக்க வைத்து உனது இருதயத்தின்கண் பொருந்திய நல்ல நயத்தினைக் கொண்ட வார்த்தைக ளெல்லாவற்றையும் வேதவார்த்தைகளை நிகர்த்து என்னிடம் சொல்லென்று கேட்கப் பொன்னை எடுத்து உரைத்ததைப் போலும் புகழ்ந்து தனது வாயைத் திறந்துச் சொல்ல ஆரம்பித்தான்.

 

1070. நேரிழை கதீசா பாலி னிகழ்ந்தது முறக்கத் தென்னும்

     பேரறி வாளன் றேர்ந்து குவைலிதுக் குரைத்த பேச்சு

     மூர்மனத் துயராற் றன்பான் மணமென வுரைத்த வாறுஞ்

     சோர்விலா துரைத்தான் மிக்க சூழ்ச்சியிற் றெளிந்த நீரான்.

37

     (இ-ள்) மிகுத்த நுண்ணிய அறிவினால் தெளிவடைந்த குணத்தினை யுடையவனான அம்மைசறா வென்பவன் நேரிய ஆபரணங்களையுடைய கதீஜா நாயகமவர்களினிடத்தில் நடைபெற்ற வர்த்தமானங்களையும் குவைலி தென்பவருக்கு உறக்கத்தென்று சொல்லும் பெரிய புத்திசாலியானவன் தனது மனசின் கண்ணே தெளிந்து உரைத்த வர்த்தமானங்களையும், பரவிய தனது மனத்துன்பத்தினால் அக்கதீஜா நாயகமவர்கள் தன்னிடத்தில் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் விவாகமென்று சொல்லிய வரலாற்றையும் தளர்வில்லாது சொல்லினான்.

 

1071. நிரைத்தெடுத் துரைத்த சொல்லை நெஞ்சில்வைத் திலையுங் காயுங்

     கரைத்தசந் தனமும் பூவுங் கட்டுரை யுடனு மீய்ந்த

     துரைத்தனத் தபித்தா லீபைச் சுடர்முகம் மதுவைப் போற்றி

     மரைத்தட மலர்க்கை கூப்பி மைசறா மனையிற் போனான்.

38

     (இ-ள்) மைசறா வென்பவன் அவ்வாறு வரிசையாக எடுத்துச் சொன்ன வார்த்தைகளை மனதின்கண் வைத்துப் பொருந்திய வசனத்தோடும் வெற்றிலையும் அடைக்காயும் கரைக்கப்பட்ட சந்தனமும் புஷ்பங்களும் கொடுத்த அதிகாரத்துவத்தையுடைய அபீத்தாலிபவர்களையும் பிரகாசத்தைக் கொண்ட நாயகம்