பக்கம் எண் :

சீறாப்புராணம்

43


முதற்பாகம்
 

நகரப்படலம்

 

கலிநிலைத்துறை

 

77. நிலங்க ளேழுக்கு நாவலந் தீவுகண் ணிகர்க்கு

   நலங்கொ டீவுக்குக் கண்மணி யறபுநன் னாடே

   புலன்கொள் கண்மணிக் குள்ளுறை யுயிரெனப் பொருந்தி

   யிலங்கு மக்கமா நகர்வளஞ் சிறிதெடுத் திசைப்பாம்

1

     (இ-ள்) நிலங்களாகிய நாவல், இறலி, குசை, கிரவுஞ்சம், புட்கரம், தெங்கு, கமுகென்னும் ஏழு தீவுகளுக்கும் அழகிய நாவற்றீவானது கண்களை யொக்கும். நலத்தைக் கொண்ட அந்நாவற்றீவுக்குக் கண்மணியானது நன்மை பொருந்திய அறபுநாடு. உணர்ச்சியைப் பெற்ற அவ்வறபு நாடாகிய கண்மணியினகம் தங்கிய ஜீவனைப் போலப் பொருந்திப் பிரகாசியாநிற்கும் மகத்தானது மக்கமா நகரத்தினது வளத்திற் கொஞ்சமெடுத்து யாம் சொல்லுவாம்.

 

                    எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

     78. விரிகதி ரெறித்த மணவளை யுகுப்ப

             விரிதிரை யகழெனுந் தடத்தி

        லெரிசிகைக் கிரணப் பதுமமா மணியி

             னினம்பல சூழ்ந்திருந் திலங்கப்

        புரிமுறுக் கவிழ்ந்த பொன்னிதழ்க் கமலம்

             பூத்திருந் ததுவெனப் புரிசை

        தெரிதரச் சிறந்து செல்வமுஞ் செருக்குந்

             திகழ்தர வீற்றிருந் ததுவே

2

     (இ-ள்) அந்த மக்கமா நகரத்தினது கோட்டையானது சங்குகளானவை விரிவைக் கொண்ட பிரகாசத்தை வீசிய முத்துக்களை ஈனும்படி விரிந்த அலைகளையுடைய அகழென்று கூறுந்தடாகத்தின் கண் மின்னுகின்ற ஒளிவினது கிரணங்களையுடைய மகத்தாகிய பதும மணியின் பல கூட்டங்கள் வளைந்திருந்து விளங்கப் புரியினது முறுக்கானது அவிழப் பெற்ற பொன்போலும் இதழ்களையுடைய தாமரை மலரானது மலர்ந்திருந்ததை நிகர்த்ததென்று சொல்லும் வண்ணம் விளங்கும்படி சிறப்புற்றுச் செல்வமும் செருக்கும் இலங்க வீறுடனிருந்தது.