பக்கம் எண் :

சீறாப்புராணம்

431


முதற்பாகம்
 

நிலையினையுடைய மேன்மாடங்க ளெல்லாவற்றிலும் அழகிய மேகக் கூட்டங்களை நிகர்த்துப் பெண்கள் தங்களின் கூந்தல்களுக்கு அகிற்கட்டைகளைப் புகைத்திடுவார்கள்.

 

1116. காக துண்டமுஞ் சந்தனக் கடிகையுங் கலந்து

     தோகை மாரிடு புகைத்திர ளிடையிடை தோன்று

     மாக மூடெழு மண்டபக் கொடுமுடி வயிர

     மேக மூடுறை மின்னெனப் பிறழ்ந்தொளி மிளிரும்.

20

     (இ-ள்) அன்றியும், மயில்போலும் சாயலையுடைய பெண்கள் அகிற் கட்டைகளையும் சந்தனக் கட்டைகளையும் ஒன்றோடொன்று கலக்கும்படி செய்து தங்களின் கூந்தலுக்கிடா நின்ற தூமத்தினது கூட்டங்கள் இடைஇடை விளங்குகின்ற ஆகாயத்தின்கண் ணெழும்பும் மண்டபங்களினது சிகரங்களிலுள்ள வயிரமணியானது, மேகத்தினிடத்தில் தங்கிய மின்னலைப் போல இலங்கிப் பிரகாசியா நிற்கும்.

 

1117. குங்கு மஞ்செறி தனத்தியர் செழுங்குழல் விரித்துப்

     பொங்கு பன்னறை யூட்டிய காழகில் புகைப்ப

     தெங்க ணும்பரப் பிடவொளி திகழெழின் முகங்கண்

     மங்கு லூடுவெண் மதியமொத் திருந்தன மாதோ.

21

     (இ-ள்) அன்றியும், குங்குமச்சேறு மிகுத்த ஸ்தனபாரங்களையுடைய பெண்கள் தங்களது செழிய கூந்தல்களை விரித்து அதிகரியா நின்ற பலவிதவாசனைத் திரவியங்களை யூட்டப் பெற்ற வயிரத்தினை யுடைய அகிற்கட்டைகளைப் புகையும் வண்ணம் செய்வது எவ்விடங்களிலும் பரவிடவே அவர்களின் பிரகாச மொளிர்கின்ற அழகிய வதனங்கள் மேகங்களின் மத்தியில் வெண்ணிறத்தைக் கொண்ட சந்திரனானது உதயமாய் இருப்பதை நிகர்த்திருந்தன.

 

1118. நிலைகொண் மாடத்து மண்டப மருங்கினு நிமிர்ந்த

     சிலைநி கர்த்தமே னிலையினுஞ் செவ்வரி விழியார்

     குலிக மார்ப்பற வரைத்தெடுத் தெழுதிய கோல

     மலைகண் மீதினும் பவளங்கள் படர்ந்தென வயங்கும்.

22

     (இ-ள்) அன்றியும், சிவந்த இரேகைகள் படர்ந்த கண்களையுடைய பெண்கள் நிலைகளமைந்த வீடுகளின் பக்கத்திலும் மண்டபங்களின் பக்கத்திலும் உயர்வுதங்கிய மலைகளையொத்த மேன்மாடங்களிலும் துகளறும்படி சாதிலிங்கத்தைக் குழியம்மிகளில் வைத்து அரைத்து எடுத்து எழுதிய கோலமானது, மலைகளின் மேலும் பவளக்கொடிகள் படர்ந்ததைப் போலப் பிரகாசியா நிற்கும்.