பக்கம் எண் :

சீறாப்புராணம்

432


முதற்பாகம்
 

1119. புகைத்த காரிருட் குழன்முடித் தருமலர் புனைவார்

     பகுத்த நன்னுத றுலங்கிடச் சுடிகைகள் பதிப்பார்

     தொகுத்த காதினிற் பலவணித் தொகைசுமந் திடுவார்

     மிகைத்த வேல்விழிக் கஞ்சனம் விரித்தெழு துவரால்.

23

     (இ-ள்) அன்றியும், பெண்கள் அகிற்கட்டைகளைப் புகையும்படி செய்த கரிய மேகத்தை நிகர்த்த கூந்தல்களைக் கொண்டையாக முடித்து அதன் மீது அரிய புஷ்பமாலைகளைச் சூடுவார்கள். பகுக்கப்பட்ட நல்ல நெற்றியானது பிரகாசிக்கும் வண்ணம் சுட்டிகளைப் பதிப்பார்கள். காதுகளில் தொகுத்த பலவித ஆபரணங்களினது கூட்டங்களை ஏற்றுவார்கள். வேலாயுதத்தையும் தமக் கிணையில்லையென்று மிகைத்த கண்களில் மையினை விரிவாய் எழுதுவார்கள்.

 

1120. பூக மென்கழுத் திடன்றக் கதிர்மணி புனைவார்

     பாகு றச்செழுந் தோள்களை பலபரித் திடுவார்

     நாக மென்முலைக் குவட்டினன் மணிவடந் தரிப்பார்

     மேக லைத்திரண் மணியொடு மருங்கில்வீக் கிடுவார்.

24

     (இ-ள்) அன்றியும், கமுகையொத்த மெல்லிய கழுத்துகளில் இடமறப் பிரகாசத்தையுடைய மணிக்கோவைகளைத் தரிப்பார்கள். தோள்களில் பொருந்தும் வண்ணம் செழிய பலவிதத் தோள்வளைகளை அணிவார்கள். மலைபோன்ற மெல்லிய முலைகளினது உச்சியில் நல்ல இரத்தின வடங்களைப் பூணுவார்கள். இடையில் கூட்டமாகிய மணிகளோடும் மேகலாபரணத்தைக் கட்டுவார்கள்.

 

1121. உவரி மென்னுரை போலும்வெண் டுகில்விரித் துடுப்பார்

     குவித னத்திடை சந்தனக் குழம்புகள் செறிப்பார்

     திவளு நல்லொளி நுதலிடை திலதங்க ளணிவா

     ரவிருங் கேழலத் தகமிரு பதத்தினு மணிவார்.

25

     (இ-ள்) அன்றியும், சமுத்திரத்தினது மெல்லிய நுரைகளைப் போன்ற வெண்ணிறத்தையுடைய வஸ்திரங்களை விரித்து அரையின்கண் உடுப்பார்கள். குவிந்த முலைகளினிடத்தில் சந்தனக் குழம்புகளைச் சேர்ப்பார்கள். பிரகாசியாநிற்கும் நல்ல ஒளியினையுடைய நெற்றியின்கண் பொட்டுகளை அணிவார்கள். இரண்டு பாதங்களிலும் ஒளிர்கின்ற பிரபையினையுடைய செம்பஞ்சுகளைத் தரிப்பார்கள்.

 

1122. சந்த மான்மதஞ் செழும்பனி நீரொடு சாந்தங்

     கந்த மெனன்றும் பொடியொடு விரையெழக் கலக்கி

     யிந்து வெண்கதிர் பரப்பிய மதிணடு விடுவார்

     சிந்து வார்தெருத் தலைதொறு மிடன்றத் தெளிப்பார்.

26