பக்கம் எண் :

சீறாப்புராணம்

437


முதற்பாகம்
 

வழிந்திடாமற் பக்கத்திற் சேர்த்துக் கொள்ளும் பான்மையைப் போல அன்போடு மணிந்தார்கள்.

 

1133. மண்முழுது மாறரியச் சிவந்தகதிர்

         மணிக்கோவை மறுவி லாத

     வெண்மணிநித் திலவடமு மேருவெனும்

         புயவரையில் விரித்த காந்தி

     கண்முழுது மடங்காத வெழினோக்கி

         யவரவர்கண் ணேற டாது

     தண்மதியும் வெஞ்சுடரும் கரநீட்டி

         யிருபுறத்துந் தடவல் போலும்.

37

     (இ-ள்) அன்றியும், பூலோக மனைத்திலும் மாறுதற்கரிய செந்நிறத்தைக் கொண்ட கிரணங்களை யுடைய இரத்தினக் கோவைகளும் குற்றமற்ற வெள்ளிய மணியாகிய முத்துக் கோவைகளும் மகாமேரு பர்வதமென்று சொல்லா நிற்கும் தோள்களாகிய மலையின்கண் பரப்பிய பிரகாசமானது, ஆகாய முழுவதிலும் அமையாத அந்நபிகள் பெருமானவர்களின் அழகைப் பார்த்து அங்குள்ளவர்களின் கண்ணெச்சிலானது வந்து பொருந்தாது குளிர்ச்சி தங்கிய சந்திரனும் சூரியனும் தங்களது கைகளை நீட்டி இருபக்கங்களிலும் தடவுவதைப் போன்றிருந்தது.

 

1134. பொன்னிதழ்க்குங் குமத்தொடையன் முகம்மதுதன்

        வயிரவரைப் புயத்திற் சாத்தி

     மின்னிடவெண் மணித்தொடையுஞ் செம்மணியும்

        போற்காந்தி விரிந்த தோற்றந்

     தன்னிலைமை தவறாத முதியோரை

        யெவரேனுஞ் சாரில் வாய்ந்த

     நன்னிலைநற் குணமறிவு பெறுவரெனும்

         பழமொழியை நவிற்றிற் றன்றே.

38

     (இ-ள்) அன்றியும், பொன்போலும் இதழ்களையுடைய குங்குமப் புஷ்பத்தினாலான மலர்மாலையை நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் வயிரமலைபோன்ற இருதோள்களிலும் பிரகாசிக்கும் வண்ணம் பொருந்தச் செய்து வெண்ணிறத்தைக் கொண்ட முத்துமாலையும் சிவந்த இரத்தின மாலையும் போலப் பிரபையை நானாபக்கங்களிலும் பரவிய காட்சியானது, தனது நிலைமையை விட்டும் ஒரு காலத்தும் தவறாத வயோதிபரை யாவராயினும் சார்ந்தால் சிறந்த நல்ல நிலைமையினையும் நல்லகுணத்தினையும் நல்ல அறிவினையும் அடைவாரென்று சொல்லும் முதுமொழியைச் சொல்லிக் காட்டிற்று.