|
முதற்பாகம்
1135.
அவனிதனிற் றனியரசை நயினாரை
முகம்மதையா
ரணத்தின் வாழ்வைக்
கவினொழுக வலங்கரித்துப்
பவனிவர
வெனவெழுகக்
கருதுங் காலைச்
சுவனபதி தனைத்திறமி
னிரயமடைத்
திடுமினெனத்
தூயோன் சத்தம்
பவனமுமண் ணுலகுகடன்
மலையுந்திசை
திசையனைத்தும்
பரந்த தன்றே.
39
(இ-ள்) அவ்வாறாக இப்பூலோகத்தின்
ஒப்பற்ற அரசரானவர்களை, நம்மனைவர்களையும் ஆட்கொண்ட நயினாரானவர்களை, வேதங்களின்
வாழ்வானவர்களை, நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மானவர்களை, அழகான தொழுகும் வண்ணம்
அலங்காரஞ் செய்து ஊர்கோலம் வரவென்று எழும்பும்படி எண்ணிய காலத்தில் பரிசுத்தமான ஜல்லஷனகுவத்த
ஆலாவின் பக்கத்தில் நின்றும் சுவர்க்க லோகத்தைத் திறவுங்கள்! நரகலோகத்தை அடைத்திடுங்களென்று
ஒரு சத்தமானது உண்டாய் வானலோகத்திலும் பூலோகத்திலும், கடல்களிலும் மலைகளிலும் எண்டிசைகளிலும்
பரவினது.
1136.
வானவர்பொற் பூமாரி
சொரிந்திடமண்
ணவர்வாழ்த்த
மறையோ ரேத்தத்
தானமென வேற்பவர்க்குப்
பொன்மணிதூ
செடுத்தருளிச்
சடங்கு தீர்த்துக்
கானமர்பூங் குழன்மடவா
ரயினிநீர்
கொணர்ந்தெடுத்துக்
களித்துப் போத
வீனமில்பல் லியமகரக்
கடலெனவார்த்
தெடுப்பவினி
தெழுந்தா ரன்றே.
40
(இ-ள்) அப்போது நபிமுகம்மது சல்லல்லாகு
அலைகிவசல்லமவர்கள் வானலோகத்தின் கண்ணுள்ள தேவர்களான மலாயிக்கத்துமார்கள்
பொன்னினாலான புஷ்பமழை பொழியவும், பூலோகத்திலுள்ள மனுஷியர்கள் ஆசீர்வதிக்கவும், வேதியர்கள்
துதிக்கவும், ஈகை யென்றேற் போர்களுக்குத் திரவியங்களும் இரத்தினங்களும் வஸ்திரங்களும் எடுத்துக்
கொடுத்துச் சடங்குகளை முடித்து வாசனை தங்கிய புஷ்பமாலை யணிந்த கூந்தலையுடைய பெண்கள் அயினிநீர்
சுமந்து கொண்டு வந்து கழித்துப் போகவும், குறைபாடற்ற வாத்தியங்கள் சுறாமீன்களையுடைய சமுத்திரத்தைப்
போல ஒலித்து ஓங்கவும், இனிமையுடனெழும்பினார்கள்.
|