பக்கம் எண் :

சீறாப்புராணம்

440


முதற்பாகம்
 

     (இ-ள்) அன்றியும், வீதியினது இடங்க ளெல்லாவற்றிலும் ஒளிராநின்ற பிரபையினை யுடைய கொடிகள் ஒன்றோடொன்று நெருங்கியடரவும், அண்ணலாராகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் பவுரியினது மத்தியில் வரிசையாகிய சங்குகள் ஒலித்து எழும்பவும் குவிந்த கைக்கொம்புகள் குமுகுமென்று சத்திக்கவும், வாத்தியங்கள் கேட்போர்களின் காதுகளை யடைக்கவும் செய்தன.

 

1141. மதித்தென மறுகிடை விண்ணின் மண்ணெழப்

     பதித்தன குளம்புவிட் டெறிந்து பாரிடை

     மிதித்தென வில்லென வேக மீக்கொளக்

     குதித்தன நெருங்கின குதிரை யீட்டமே.

45

     (இ-ள்) அன்றியும், குதிரைக் கூட்டங்கள் கொழுத்ததென்று சொல்லும் வண்ணம் தங்களின் பாதங்களை வீதிகளினிடத்தில் விட்டு உதைத்து மண்ணானது ஆகாயத்தி லெழும்பும்படி பதியச் செய்தன. மேலும் பூமியின்கண் மிதித்த தெனவும் அங்ஙனம் மிதிக்கவில்லையெனவும் வேகமானது அதிகரிக்கும் வண்ணம் சாடி ஒன்றோடொன்று நெருங்கின.

 

1142. மதங்களைச் சிந்தின மறுகின் மாந்தர்தம்

     பதங்களை வழுக்கிடப் படர்செ விச்சுள

     கிதங்கொள்வண் டினம்புடைத் தெழுப்ப வெங்கணுங்

     கதங்கொடு நெருங்கின கரியின் கூட்டமே.

46

     (இ-ள்) அன்றியும், யானைக் கூட்டங்கள் வீதிகளிலுள்ள மனுஷியர்களின் கால்களை வழுக்கும்படி மதங்களைச் சொரிந்தன. விரிந்த செவிகளாகிய சுளகினால் இனிமை கொண்ட தேனீக்களின் தொகுதியைக் கொழித்து எழுப்புதற்காய் கோபங் கொண்டு எவ்விடங்களிலும் நெருங்கின.

 

1143. கடுவிடப் பணத்தலை நெளியக் கண்ணகன்

     படிகுழித் தெழுதுகள் பரப்பிப் பாங்கினிற்

     கொடிநிறைத் தசைந்தகோ லாரி வண்டில்க

     ளிடைவெளி யின்றென வெங்கு மீண்டிலா.

47

     (இ-ள்) அன்றியும், பக்கங்களில் கொடிகளை நிறையும் வண்ணம் செய்து அசையப் பெற்ற கோலாரி வண்டில்கள் கொடிய விடத்தைக் கொண்ட படாமகுடத்தையுடைய ஆதிசேடன் தனது சரீரம் நெளியும்படி இடமகன்ற இப்பூமியை குழியச் செய்து அதனால் எழாநிற்கும் தூசிகளை நானாபக்கங்களிலும் விரித்து இடைவெளி யில்லையென்று சொல்லும் வண்ணம் எல்லாவிடங்களிலும் கூடின.