|
முதற்பாகம்
1144.
இசையொடு பல்லிய மியம்பி யார்த்தெழ
வசையறு காளையர்
மருங்கு சுற்றிடச்
சசியெனக் கதிரொளி
தவழும் வீதியிற்
றிசைதிசை மலிந்தன
சிவிகை வெள்ளமே.
48
(இ-ள்) அன்றியும், சந்திரனைப்
போல பிரகாச ஒளியானது எவ்விடங்களிலும் தவழா நிற்கும் அந்தத் திருமக்கமா நகரத்தின் கண்ணுள்ள
வீதிகளினது எல்லாத் திசைகளிலும் கீதங்களுடன் வாத்தியங்கள் முழங்கி ஒலித்து எழும்பவும் குற்றமற்ற
இளம்பருவத்தையுடைய வாலிபர்கள் இடைகளில் சுற்றவும், பல்லக்கினது கூட்டங்கள் அதிகரித்தன.
1145.
பிடிபடு குசைப்பரி
மீதும் பெய்மழை
கடகரி மீதினுங்
கதிர்கொண் மாமணிப்
படமிடு சிவிகையின்
மீதும் பாங்கெலாஞ்
சுடரணி திகழ்ந்தெனக்
கிளைஞர் சுற்றினார்.
49
(இ-ள்) அன்றியும், தங்களின்
கிளைஞர்களான ஹாஷீம் குலத்தவர்களும் குறைஷிக் குலத்தவர்களும் நான்கு பக்கங்களிலும் பிரகாசமமைந்த
ஆபரணங்கள் ஒளிர்வதைப் போலப் பிடிபடாநிற்கும் கடிவாளங்களையுடைய குதிரைகளின் மீதும் மழைபோலும்
பொழியா நின்ற மதங்களையுடைய யானைகளின் மீதும் கிரணங்களைக் கொண்ட மகத்தான இரத்தின வர்க்கங்களையுடைய
படங்களையிட்ட பல்லக்குகளின் மீதும் வளைந்தார்கள்.
1146.
வெள்ளணி யுடையினர்
விரிந்த கஞ்சுகர்
கள்ளவிழ் மாலையர்
கலன்கொண் மேனிய
ரள்ளிய வழகின
ரரச வீதியி
னெள்ளிட மிலையென
வெங்கு மீண்டினார்.
50
(இ-ள்) அன்றியும், வெண்ணிறமமைந்த
அழகிய உடையினை யுடையவர்களும்; விரிவுற்ற கஞ்சுகத்தை யுடையவர்களும், தேனானது அவிழாநிற்கும்
மலர்மாலைகளை யுடையவர்களும், ஆபரணங்களைக் கொண்ட சரீரத்தையுடையவர்களும், நெருங்கிய அழகினை
யுடையவர்களும், அந்தத் திருமக்கமா நகரத்திலுள்ள இராஜவீதிகளில் எட்போடும் இடமில்லையென்று
சொல்லும் வண்ணம் எல்லா விடங்களிலும் கூடினார்கள்.
1147.
செழுமுகிற் கவிகையஞ்
செம்மல் வீதிவாய்
வழுவறு பவனியின்
வருகின் றாரென
வெழுவகைப் பேதைபே
ரிளம்பெ ணீறதாய்க்
குழுவுடன் றிசைதிசை
நிறைந்து கூடினார்.
51
|