பக்கம் எண் :

சீறாப்புராணம்

443


முதற்பாகம்
 

1151. வழிகதிர் முகம்மதின் வனப்பு வெள்ளமீக்

     கெழுதிரைக் குவந்தன மெழுந்த கூட்டம்போற்

     பொழிகதிர்க் கலன்பல புரள வெங்கணுந்

     தொழுதிகொண் டுற்றனர் தோகை மாதரே.

55

      (இ-ள்) அன்றியும், வழியா நிற்கும் பிரகாசத்தையுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் அழகாகிய வெள்ளமானது மேலாய் எழாநின்ற அலைகளையுடைய தடாகத்தை விரும்பி எழும்பிய அன்னப்பட்சியினது கூட்டத்தைப் போலக் கிரணங்களை சிந்துகின்ற பலவித ஆபரணங்கள் தங்களது மேனியின்கண் கிடந்து புரளும் வண்ணம் மயில்போலும் சாயலையுடைய பெண்கள் கூட்டமுற்று எல்லாவிடங்களிலும் வந்து பொருந்தினார்கள்.

 

1152. தேனென வமிர்தெனத் திரண்ட பாகெனத்

     தூநறுங் கனியெனச் சுடருங் கொம்பெனப்

     பூநறுங் கரும்பெனப் பொருவின் மாதரார்

     வானவ ரமிர்தென வளைந்து சுற்றினார்.

56

      (இ-ள்) அன்றியும், தேனைப் போலவும் அமிர்தத்தைப் போலவும் திரட்சியுற்ற சர்க்கரையைப் போலவும் பரிசுத்தமான பரிமளத்தையுடைய பழத்தைப் போலவும் பிரகாசியா நிற்கும் பூங்கொம்பைப் போலவும் அழகிய நறிய கரும்பைப் போலவும் ஒப்பில்லாத பெண்களானவர்கள் தேவாமிர்தத்தைப் போலும் நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைச் சுற்றி வளைந்தார்கள்.

 

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

1153. வண்ணவார் முலைக்கொம் பன்னார் மருங்கொசிந் தசைய நோக்கிக்

     கண்ணகன் ஞால மெல்லாங் களிப்புறு மரிய காட்சி

     யண்ணறன் மணத்தின் கோல மாமினா வென்னு மந்தப்

     பெண்ணிருந் தினிது காணப் பெற்றிலள் காணு மென்பார்.

57

      (இ-ள்) அழகிய இரவிக்கை யணிந்திருக்கும் முலைகளையுடைய பூங்கொப்பைப் போன்ற பெண்களானவர்கள் தங்களின் இடையானது ஒசிதலுற்று அசையும்வண்ணம் இருகண்களினாலும் பார்த்து இடமகன்ற இந்தப் பூலோகமுழுவதும் சந்தோஷத்தை யடையா நிற்கும் அரிதான காட்சியையுடைய அண்ணலாகிய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் விவாகத்தினது கோலத்தை அவர்களையீன்ற ஆமினாவென்னு மபிதானத்தையுடைய அந்தப் பெண்ணானவளிருந்து இன்பமுடன் தனது கண்களாற் பார்க்கப் பெற்றிலளென்று சொல்லுவார்கள்.