பக்கம் எண் :

சீறாப்புராணம்

445


முதற்பாகம்
 

பிரகாசத்தையுடைய தெருவினிடத்தில் பிரதிதினமும் இவர்களினது பவனியை நாமனைவர்களும் பார்க்கும் வண்ணம் மெய்யா நின்ற தவத்தைச் செய்குவோமென்று சொல்லுவார்கள்.

 

1157. வரிசைக்கு மிகுந்த செவ்வி முகம்மதின் வடிவை நோக்கி

     யுருசிக்க மலர்த்தே னுண்ட வொண்சிறைப் பறவை போலப்

     பரிசிப்ப தொத்து நீங்காப் பவனியி லிருகண் ணாரத்

     தெரிசிக்க நம்போன் மிக்க செனனமார் பெறுவ ரென்பார்

61

      (இ-ள்) அன்றியும், சங்கையினால் அதிகரித்த அழகையுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் வடிவத்தைக் கண்களினாற் பார்த்து மதுரமுறும் வண்ணம் புஷ்பங்களிலுள்ள மதுவையருந்திய ஒள்ளிய சிறகுகளையுடைய தேனீக்களைப் போலப் பரிசிப்பதை நிகர்த்து மாறாத இப்பவனியில் தங்களின் இரண்டு கண்களும் பொருந்தும்படி பார்ப்பதற்கு நம்மைப் போல் மேலாகிய ஜெனனம் பெறுவார் யாவர் ஒருவருமில்லாரென்று சொல்லுவார்கள்.

 

1158. ஆரவா ருதியிற் றோன்று மமுதனார் பரியை நோக்கிப்

     பாரிடை பையப் பையச் செல்லெனப் பரிவிற் சொல்வார்

     வாரமா மறுகிற் போத மனமற மறுகி நின்னைக்

     கோரமென் றிதற்கோ பேரிட் டுலகெலாங் கூறிற் றென்பார்.

62

      (இ-ள்) அன்றியும், ஒலியைக் கொண்ட சமுத்திரத்திலுதயமாகா நிற்கும் தேவாமிர்தத்தைப் போன்ற பெண்களானவர்கள் நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் ஏறியிருக்கும் குதிரையைத் தங்களின் கண்களினாற் பார்த்து இந்தப் பூமியின்கண் நீ மெல்லமெல்லச் செல்லுவாயாகவென்று அன்போடும் சொல்லுவார்கள். அப்போது அந்தக் குதிரை பகுதியாக மகத்தான மற்றும் வீதிகளிற் செல்லத் தங்களின் சிந்தையான தற்றுப் போகும் வண்ணம் மறுக்கமடைந்து மறுத்தும் அக்குதிரையைப் பார்த்து இதற்காக வேண்டியோ உன்னைக் கோரமென்றுப் பெயரிட்டு உலகமனைத்தும் சொல்லிற்று என்று சொல்லுவார்கள்.

 

1159. பொருத்துதற் கரிய செவ்விப் புரவல ரழகைக் கண்ணா

     லருத்திய துயரக் காற்றா லவதியுற் றலைந்து காந்தட்

     கரத்தணி பணிக ளியாவுங் கருத்துட னிழந்து வாசம்

     விரித்தபூ வுதிர்த்த கொம்பாய் விளங்கிழை யொருத்தி நின்றாள்.

63