|
முதற்பாகம்
(இ-ள்) அன்றியும், பிரகாசியா நிற்கும் ஆபரணங்களையுடைய ஒரு பெண்ணானவள் அமைத்தற்கரிய
அழகையுடைய அரசரான நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் வடிவத்தைக் கண்களினால்
அருந்திய துன்பக் காற்றினால் வருத்தமுற்று அலைதலடைந்துத் தனது எண்ணத்தோடும் காந்தண்மலர்
போலும் கைகளில் தரித்த கலன்களனைத்தையும் இழக்கப் பெற்று பரிமளத்தைப் பரவும்படி செய்யும்
புஷ்பங்களைச் சிந்திய ஒரு கொம்பைப் போல நின்றாள்.
1160.
கோதறு கருணை வள்ளல்
குவவுத்தோள் வனப்பைக் கண்ணாற்
றீதற வாரி யுண்ட செழுங்கொடி
யொருத்தி செம்பொற்
பூதரக் கொங்கைச் சாந்து
முத்தமும் பொரிவ தென்கொல்
காதினி லுரைமி னென்றோர்
காரிகை தன்னைக் கேட்டாள்.
64
(இ-ள்) அன்றியும், குற்றமற்ற திருவருளையுடைய வள்ளலான நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்களின் பருப்பமுற்ற புயங்களினது அழகைத் தனது கண்களினால் தீதறும் வண்ணம் வாரியருந்திய செழிய
கொடிபோலும் இடையை யுடைய ஒரு பெண்ணானவள் தனது செந்நிறத்தையுடைய பொன்னாலான மகாமேருப்
பருவதத்தை நிகர்த்த ஸ்தனபாரங்களிலுள்ள கலவைச்சேறும் முத்தங்களும் பொரிவது யாது காரணம்?
அதை எனது காதுகளில் சொல்லுமென்று வேறேயொரு பெண்ணினிடத்தில் வினவினாள்.
1161.
திருத்தகு பவனி நோக்குஞ்
சேயிழை யொருத்தி காதல்
வருத்தமுற் றிருந்து பஞ்சவனக்கிளி
கையி லேந்திக்
கரத்தினைப் பொருத்தச்
செய்த காளைபா லேகி யென்ற
னுரத்தினைப் பொருத்தச்
சொல்லென் றோதும்வா யொழிகி லாளே
65
(இ-ள்) அன்றியும், நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் திருத்தமான பவனியைப்
பாரா நிற்கும் சிவந்த ஆபரணங்களை யுடைய ஒரு பெண்ணானவள் காமாசையாகிய துன்பத்தைப் பொருந்தி
யிருந்துத் தனது கைகளில் பஞ்சவண்ணத்தை யுடைய ஒரு கிளியைத் தாங்கிக் கொண்டு முன்னர் ஷாம்
நகரத்தின்கண் வைத்து கைகளைப் பொருந்தும் வண்ணம் செய்த காளைப் பருவத்தை யுடையவர்களான அந்நபிகள்
பெருமானவர்க ளிடத்திற் போய் என்னுடைய மார்பைப் பொருத்தச் சொல்லுவாயாகவென்று
சொல்லுகின்ற வாயானது மாறாதிருந்தாள்.
|