பக்கம் எண் :

சீறாப்புராணம்

457


முதற்பாகம்
 

1193. வார்த்த டக்கரி வண்முலை விம்முற

     வேர்த்து நின்று வெதும்பிவெ தும்பியே

     கூர்த்த தங்கருத் துள்ளுறை கொண்டலைப்

     பார்த்த கண்கள் பறிப்பரி தென்பரே.

97

      (இ-ள்) அன்றியும், கச்சணிந்த பெரிய யானைக் கொம்பை நிகர்த்த அழகிய முலைகள் விம்முதலுறும் வண்ணம் சரீரம் வியர்க்கப் பெற்று நின்று மிகவும் வாட்டமுற்றுக் கூர்மைபொருந்திய தங்களின் கருத்தினகம் தங்கா நிற்கும் மேகமாகிய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை நோக்கிய கண்களை அந்நோக்கத்தை விட்டும் பறிப்பது அரிதாகுமென்று சொல்லுவார்கள்.

 

1194. மன்னைப் பார்த்து மதிமுகம் பார்த்துநின்

     றென்னைப் பார்க்கிலர் காணென வேங்குவார்

     மின்னைப் பார்த்த விளங்கிழை யார்களென்

     றன்னைப் பார்த்தனர் காணவர் தாமென்பார்.

98

      (இ-ள்) அன்றியும், சில பெண்கள் அரசரான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைப் பார்த்தும் அவர்களின் சந்திரன் போன்ற முகத்தைப் பார்த்தும் அவர்கள் என்னைப் பார்த்தார்களில்லரென்று சொல்லி நின்று ஏக்கமுறுவார்கள். அவ்வாறு ஏக்கமுற்ற பெண்களைப் பார்த்த பிரகாசியா நிற்கும் ஆபரணங்களையுடைய வேறே சில பெண்கள் அந்நபிகள் பெருமானவர்கள் என்னைப் பார்த்தார்களென்று சொல்லுவார்கள்.

 

1195. வண்ண வார்புய மன்னவர் மெய்யெழிற்

     கண்ணி னூடுங் கரந்ததென் பார்சில

     ரெண்ணி னூடு மிருந்ததென் பார்சில

     ருண்ணி னைவொடு முற்றதென் பார்சிலர்.

99

      (இ-ள்) அன்றியும், சில பெண்கள் அழகிய உயர்ச்சியுற்ற தோள்களையுடைய இராஜரான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களினது திருமேனியின் கண்ணுள்ள அழகானது கண்களினுள்ளும் ஒளித்தது என்று சொல்லுவார்கள். சில பெண்கள் எண்ணினிடத்தும் இருந்ததென்று சொல்லுவார்கள். சில பெண்கள் உள்ளத்தினது நினைப்போடும் பொருந்தினது என்று சொல்லுவார்கள்.

 

1196. ஏந்து கொங்கை யணியிழப் பார்சிலர்

     கூந்தல் சோரக் குழைந்துநிற் பார்சிலர்

     காந்தி மேனி கரிந்திடு வார்சிலர்

     மாந்தி யாசை மயக்குறு வார்சிலர்.

100