பக்கம் எண் :

சீறாப்புராணம்

460


முதற்பாகம்
 

திருவடிகளை விளக்கஞ் செய்து வஸ்திரத்தினால் துடைத்துச் சங்கையையுடைய முறைமைகள் பலவற்றைச் செய்தார்கள். அப்போது நாயகம் நபிமுகம்மது முஸ்தபாறசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் பூங்கொத்தைக் கொண்ட கொழுந்துகளையும் மலர்களையும் பொழிந்த பரிசுத்தமான வாசனை தங்கிய பாயலின்கண் நடந்து கணித்தற்கரிய கிரணங்கள் வெளியிற்சாடா நிற்கும் கோமேதகம், நீலம், பவளம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைரம், வைடூரிய மென்னும் ஒன்பது வகை இரத்தினங்களையும் அழுத்தப் பெற்ற ஒரு ஆசனத்தின் மீது அழகுபெறும் வண்ணம் தங்கியிருந்தார்கள்.

 

1201. அமரர்விண் ணுலகும் புவனமும் விளக்கு

         மணிவிளக் கெனுங்கதீ சாவைத்

     தமனியத் தசும்பு நனிவிரை கமழ்ந்த

         தண்ணறும் புதுப்புன லாட்டி

     யுமிழ்கதிர்க் கொடியை வெண்ணிலாக் கலைவந்

         துடுத்தபோற் கலையெடுத் துடுத்திச்

     சுமையிருட் காவின் முகிறவழ்ந் தென்னச்

         சுரிகுழற் ககிற்புகை கமழ்த்தி.

105

      (இ-ள்) அப்போது தேவர்களான மலாயிக்கத்து மார்களினது ஆகாயலோகத்தையும் பூலோகத்தையும் விளக்கா நிற்கும் அழகிய தீபமென்று சொல்லும் கதீஜாநாயகி யவர்களைப் பொன்னினாலியன்ற குடத்தின் கண்ணுள்ள மிகுந்த வாசனை கமழப் பெற்ற குளிர்ச்சி தங்கிய நன்மையையுடைய புதிய ஜலத்தினால் ஸ்நானஞ் செய்வித்துப் பிரகாசத்தை யுமிழா நிற்கும் பொற்கொடியை வெள்ளிய சந்திரகிரணங்கள் வந்து சுற்றியதைப் போல வஸ்திரத்தை எடுத்துடுத்திப் பாரமாகிய இருளையுடைய சோலையின்கண் மேகங்கள் தவழ்ந்ததைப் போல முறுக்கைக் கொண்ட கூந்தலுக்கு அகிற்கட்டையினது தூமத்தைக் கமழும்படி செய்து.

 

1202. இருட்குல மனைத்தும் பிடித்தொரு தலத்தி

         லிருத்துவ தெனக்குழ லிறுக்கி

     யருட்டமுண் டறுகாற் சுரும்பின மலம்பு

         மலங்கலை யிலங்குற வணிந்து

     திருத்திய முகிலிற் சசிக்கிடை கதிருஞ்

         சேர்ந்தெனத் திருப்பிறை தரித்துப்

     பொருத்திளம் பிறையில் விரிச்சிகன் கதிர்கள்

         புரண்டென நுதற்கணி புனைந்தார்.

106