பக்கம் எண் :

சீறாப்புராணம்

467


முதற்பாகம்
 

அமர்ந்த சங்கைபொருந்திய நன்மையையுடைய ஆண்டவர்கள், தெரியப்பெற்ற மலர்மாலையணிந்த கதீஜாநாயகி யவர்களினது ஆண்டவர்களாகிய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் சம்பத்தடைந்து இனிமையோடும் வாழ்ந்திருந்தார்கள்.

 

1215. மக்கமா நகருஞ் செல்வமும் வாழ

         மறைவலோ ரறநெறி வாழத்

     தக்கமெய்ப் புகழுங் கிளைஞரும் வாழத்

         தரணிநாற் றிசையினும் வாழ

     மிக்கநன் னெறிநேர் முகம்மதுஞ் சிறந்த

          விரைகமழ் மதுரமூற் றிருந்த

     விக்குமென் மொழியா ரெனுங்கதீ சாவு

          மினிதுறப் பெரிதுவாழ்ந் திருந்தார்.

119

      (இ-ள்) அன்றியும், பெருமை பொருந்திய திருமக்கமாநகரமும் அங்குள்ள செல்வங்களும் வாழவும், வேதவல்லவர்களான பண்டிதர்களின் தருமத்தினது சன்மார்க்கம் வாழவும், தகுதியாகிய உண்மையான கீர்த்தியும் குடும்பத்தார்களும் வாழவும், பூலோகத்தின்கண் நான்கு திக்குகளிலுமுள்ள யாவர்களும் வாழவும், மிகுதியாகிய நல்ல நெறியினைக் கொண்ட சத்தியத்தையுடைய நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் சிறப்பாகிய வாசனை பரிமளியா நிற்கும் இனிமையானது ஊற்றாக இருக்கப் பெற்ற கரும்பினது இரசத்தைப் போலும் மெல்லிய வார்த்தைகளை யுடையவர்களென்று சொல்லும் கதீஜாநாயகியவர்களும் இனிமையுறும் வண்ணம் பெரிதாக வாழ்ந்திருந்தார்கள்.