பக்கம் எண் :

சீறாப்புராணம்

50


முதற்பாகம்
 

கலிநிலைத்துறை

 

92. மானை யன்னகண் மடந்தையர் வதுவையின் முழக்குஞ்

   சேனை மன்னவர் படைமுர சதிர்தெரு முழக்குந்

   தான மிந்நகர் முதலெனச் சாற்றிய முழக்குஞ்

   சோனை மாமழை முழக்கென வைகலுந் தொனிக்கும்.

16

     (இ-ள்) அன்றியும், அந்த மக்கமா நகரத்தினது மானின் மருண்ட பார்வையை நிகர்த்த பார்வையைக் கொண்ட கண்களையுடைய மாதர்களினது விவாகத்தினது ஓசையும், தெருக்களில் சேனைத் தலைவர்களின் படைமுரசமானது ஒலிக்கின்ற ஓசையும், இந்த மக்கமா நகரமானது கொடைக்கு முதன்மையானதென்று கூறுகின்ற ஓசையும், பெரிய விடா மழையினது ஓசையைப் போன்று பிரதிதினமும் முழங்காநிற்கும்.

 

93. வீதி வாய்தொறு மிடனற நெருங்கிய மேடைச்

   சோதி வெண்கதி ரந்தரத் துலவிய தோற்ற

   நீதி மானபி பிறந்தநாள் விண்ணவர் நெருங்கிக்

   கோதில் பொன்னகர் திறந்தவாய்க் கதிரெனக் குலவும்.

17

      (இ-ள்) அன்றியும், அந்த மக்கமா நகரத்தினது தெருக்களினிடங்கள் தோறும் இடமில்லாது செறிந்த உப்பரிகைகளின் பிரகாசத்தைக் கொண்ட வெள்ளிய கிரணங்கள் ஆகாயத்தின்கண் உலவுகின்ற தோற்றமானது, நீதியைக் கொண்ட பெருமையையுடைய நமது நாயகம் எம்மறைக்குந் தாயகம், நபிகட் பெருமான் நபி காத்திமுல் அன்பியா ஹபீபு றப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் இவ்வுலகத்தினிடத்து அவதரித்த நாளில் தேவர்களாகிய மலாயிக்கத்துமார்கள் நெருக்கமுற்றுத் திறந்த களங்கமற்ற சொர்க்க லோகத் திடத்தினது ஒளிவைப் போன்று ஒளிரா நிற்கும். 

 

94. மன்ற லங்கம ழகழ்புனை சுதைதிகழ் மதிளா

   னின்றி லங்கிய கணமணிக் கொடுமுடி நிரையான்

   முன்றி லெங்கணு மசைதரு கொடிநிறை முறையா

   லென்று மிந்நகர் பொன்னக ரென்பதொத் திடுமே.

18

      (இ-ள்) அன்றியும், அழகிய வாசனையானது பரிமளிக்கின்ற அகழியினது பொலிவைக் கொண்ட சுண்ணச் சாந்து பிரகாசிக்கும் மதிலாலும், நிற்கப் பெற்று ஒளிர்கின்ற கூட்டமாகிய இரத்தினங்களையுடைய செய்குன்றத்தினது வரிசையாலும், முற்றங்களில் எவ்விடத்தும் நின்று அசையும்படி நிறைந்த கொடிகளின் ஒழுங்காலும், எக்காலமும் இந்த மக்கமா நகரமானது சொர்க்க லோக மென்பதைப் பொருவாநிற்கும்.