பக்கம் எண் :

சீறாப்புராணம்

51


முதற்பாகம்
 

95. பட்ட முற்றிடு நபிகளால் விண்ணவர் பரிவாற்

   கட்டு பேரொளிக் ககுபத்துல் லாவிருக் கையினான்

   மட்டு வார்குளிர் சோலையான் மலிந்தபொன் னுலக

   மெட்டு மொன்றெனத் திரண்டுவந் திருந்ததொத் திருக்கும்.

19

     (இ-ள்) அன்றியும், பட்டங்களைப் பெற்றிடும் நபிகளாலும், தேவர்களாகிய மலாயிக்கத்து மார்கள் அன்போடும் கட்டிய பெரிய பிரகாசத்தைக் கொண்ட கஃபத்துல்லா வென்னும் பரிசுத்த பள்ளி தங்கிய சோலைகளினாலும் எட்டுச் சுவர்க்க லோகங்களும் ஒன்றென்று கூறும்படி கூடி வந்து தங்கியதை இந்த மக்கமா நகரமானது நிகர்த்து இராநிற்கும்.

 

96. தெரிந்த செவ்வியர் முறைவழி தெளிந்தவர் செந்நூற்

   சொரிந்த நாவினர் முதியவர் திரண்டசொல் லோதை

   யெரிந்த செங்கதி ரிலங்கிய பள்ளிக ளெவையும்

   விரிந்த வாய்திறந் தோதுவ போன்றன வேதம்.

20

     (இ-ள்) அன்றியும், யாவற்றையும் அறிந்த அழகையுடையோர்களும், மார்க்க நெறிகளைத் தேர்ந்தவர்களும், செம்மையாகிய வேதநூலைப் பொழிந்த நாவையுடையவர்களும், வயதால் முதிர்ந்தவர்களும், ஓதுகின்ற திரண்ட ஓசையானவை, ஒளிர்கின்ற செந்நிறத்தைக் கொண்ட ஒளிவானது பிரகாசிக்கின்ற பள்ளிகள் யாவும் தங்களின் விரிந்த வாய்களைத் திறந்து வேதங்களை ஓதுவனவற்றை நிகர்த்தன.

 

97. சந்திர காந்திசெய் பலகையை மடிமிசை தரித்தே

   யிந்திர நீலமொத் திருந்தமை தோய்த்ததி லெழுதி

   மந்திர மாமொழி மறைபயி லிளையவர் நெருங்கி

   யெந்த வீதியு முழங்குவ திவையலா லிலையே.

21

       (இ-ள்) அன்றியும், மந்திரமாகிய மகத்தான வசனங்களையுடைய வேதத்தைப் படிக்கின்ற சிறுவர்கள் எழுதி எந்தத் தெருக்களிலும் செறிதலுற்றுச் சந்திரப் பிரகாசத்தைச் செய்யாநிற்கும் பலகைகளை மடியின் மீது தாங்கி இந்திர நீலத்தை நிகர்த்து இருக்கப் பெற்றமையைத் துகிலிகையில் தோயச் செய்து அந்தப் பலகைகளில் ஒலிக்கும் ஓசைகளாகிய இவைகளே யல்லாமற் பிறி தொன்றுமில்லை.

 

98. மறையின் மிக்கவ ரோதிய வோசையும் வரிசைத்

   துறவின் மிக்கவர் திக்கிறி னோசையுஞ் சூழ்ந்தே

   யிறைவ னைத்தொழு திருகையு மேந்திய வாமீன்

   முறைமு றைப்படிக் கூறிய வோசையு முழங்கும்.

22