பக்கம் எண் :

சீறாப்புராணம்

512


முதற்பாகம்
 

அவர்களும், அப்துர் ரஹ்மான் றலியல்லாகு அன்கு அவர்களும், பக்கம் விட்டு நீங்காத செழிய தேனைப் பொருந்தும் சிறகுகளை யுடைய வண்டுகளைப் போல ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவைத் தொழுதார்கள். 

 

1338. சீற்ற மடங்கா வரிவேங்கை

          திரியும் வனமுங் கொடுமடங்க

     லேற்றை வெருவி விலங்கினங்க

          ளிருக்கு மிடமும் வரையிடத்துந்

     தூற்று மருவிச் சாரலினுந்

          தோன்றா திருண்ட மனையிடத்தும்

     வேற்றுச் சமயப் பயத்தொதுங்கி

          விதித்த தொழுகை முடித்துவந்தார்.

43

      (இ-ள்) அவ்வாறு தொழுதவர்கள் கோபமானது அடங்காத இரேகைகளையுடைய புலிகள் சஞ்சரிக்கும் காடுகளிலும், கொடிய ஆண் சிங்கத்திற்குப் பயந்து மிருகக் கூட்டங்க ளிருக்கின்ற இடங்களிலும், மலையினிடங்களிலும், தூற்றா நிற்கும் அருவிகளையுடைய சாரல்களிலும், பிரகாசியாது கருத்திருக்கின்ற மனையினிடங்களிலும், புறசமயத்தினது அச்சத்தினால் ஒதுக்கமுற்று அல்லாகுவத்த ஆலாவினால் விதிக்கப்பட்ட தொழுகையை நிறைவேற்றி வந்தார்கள்.

 

1339. வேதப் பொருளாய்ப் பொருளொளியாய்

           விளங்கு முதலோன் றிருக்காட்சித்

     தூதென் றுதித்த முகம்மதுவுஞ்

           சுருதி நெறித்தீன் பெரியோருந்

     தீதுற் றுலைக்குங் கொடுங்காபிர்

           தெரியா வண்ண மூவாண்டு

     பேதப் படாதி ரகசியத்தின்

           பெரியோன் வணக்கம் பெருக்கினரே.

44

      (இ-ள்) வேதார்த்தமாகிப் பொருளினது பிரகாசமாய் விளங்கு முதன்மையனான ஜல்லஷானகு வத்த ஆலாவின் அழகிய காட்சியின் றசூலென்று உதயமாகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் வேத ஒழுங்கையுடைய தீனுல் இஸ்லாமென்று சொல்லும் மார்க்கத்தினது பெரியோர்களும் தீமையுற்று வருத்தா நிற்கும் கொடிய காபிர்களுக்குத் தெரியாதபடி வேற்றுமைப் படாது மூன்று வருடம் இரகசியமாய்ப் பெரியவனான ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவின் தொழுகையை அதிகமாய்த் தொழுது வந்தார்கள்.