பக்கம் எண் :

சீறாப்புராணம்

513


முதற்பாகம்
 

தீனிலைக்கண்ட படலம்

 

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

1340. சீ்தவொண் கவிகை நீழ றிருந்திய குரிசி லானோர்

     தூதென நபியின் பட்டந் துலங்கிய நான்கா மாண்டில்

     வேதம்நல் வணக்க மியார்க்கும் விரித்துற விளக்கு மென்ன

     வாதிதன் பருமான் மேற்கொண் டமரர்கோ னுரைத்துப் போனார்.

1

      (இ-ள்) ஒள்ளிய மேகக் குடையினது நிழலானது திருத்தமாகிய குரிசிலானவர்களான நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கு றசூலென்று நபியின் பட்டம் விளங்கிய நான்காம் வருடத்தில் அமராதிபரான ஜபுறயீல் அலைகிஸ்ஸலா மவர்கள் ஆதியாகிய ஜல்லஜலாலகு வத்த ஆலாவின் கட்டளையை மேற்கொண்டு யாவர்களுக்கும் தங்களின் புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தையும் நன்மை பொருந்திய தொழுகையையும் விரித்துப் பொருந்தும் வண்ணம் விளக்குங்களென்று அந்நபிகள் பெருமானவர்களிட்டத்தில் சொல்லிவிட்டு சொர்க்கலோகத்திற்குப் போயினார்கள்.

 

1341. பொருப்பிடத் தொளித்தும் வாழாப் புறமனை யிடத்தும் புக்கி

     யிருப்பது தகாதென் றாயத் திறங்கிய தென்னக் கேட்டு

     மருப்பருங் கரடக் கைமா மதர்த்தன மதர்த்து வீரர்

     தெருப்புகுந் தெவர்க்குந் தோன்றத் தீனிலை வணக்கஞ்செய்தார்.

2

      (இ-ள்) அப்போது வீரர்களாகிய தீனுல் இஸ்லாத்திலான அனைவர்களும் மலைகளினிடத்தில் ஒளித்தும் வாழாத புறமனைகளிடத்தில் புகுந்தும் நாம் இருப்பது தகாது என்று வேதவசன மிறங்கிற்றென்று நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களினாற் கேள்வியுற்றுக் கொம்புகளையும் அரிய மதங்களையுமுடைய யானைகள் மதங் கொண்டதைப் போல மதங்கொண்டு வீதிகளில் நுழைந்து யாவர்களுக்கும் தெரியும் வண்ணம் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்க நிலைமையாகிய தொழுகையைத் தொழுதார்கள்.