பக்கம் எண் :

சீறாப்புராணம்

518


முதற்பாகம்
 

சத்தியத் தூதரானவர்கள். அவர்களின் வார்த்தைகளை மறுக்காது நின்றவர்கள் அழிவில்லாத நன்மை பொருந்திய சொர்க்கலோகத்தை யடைவார்கள். எங்களுக்குப் பொருந்திய தீனுல் இஸ்லாமென்னும் மார்க்க நிலைமையைப் பொய்மையென்று சொன்ன மனுஷியர்களே யல்லாமல் தேவர்களும் நரகம் போய்ச் சேருவார்கள்.

 

1355. தீய்நர கடைவ ரென்ற சொற்செவித் துளையின் மாறாக்

     காயெரி நெய்யிட் டென்னக் கட்கனல் கதுவக் காபிர்

     பாய்மதக் களிறு போலப் படுகொலை மனத்த ராகி

     வாய்துடி துடிப்பப் பேசி வருமித்து நெருங்கி நின்றார்.

16

      (இ-ள்) சகுது றலியல்லாகு அன்கு அவர்கள் அவ்வாறு அக்கினியையுடைய நரகத்தின்கண் போய்ச் சேருவார்கள் என்று சொல்லிய வார்த்தையானது நீங்காத காய்ந்த நெருப்பில் நெய்யை இட்டதைப் போல அந்தக் காபிர்களின் செவித் துவாரங்களிற் செல்ல அவர்கள் இரண்டு கண்களிலும் தீயானது அதிகமாய்ப் பற்றும் வண்ணம் பாயா நிற்கும் மதங்களையுடைய யானைகளைப் போல மிகுத்த கொலைத் தொழிலைக் கொண்ட மனசை யுடையவர்களாகித் தங்களின் வாயானது துடிதுடிக்கும்படி பேசி வைராக்கியமுற்று நெருங்கி நின்றார்கள்.

 

1356. வரைதிரண் டனைய பொற்றோண் மன்னவர் சகுது கோபங்

     கரைகடந் தென்னச் சோகத் தென்பினைக் கரத்தி லேந்தி

     விரைவொடுஞ் செறுத்து நின்ற வீரரி லொருவன் றன்னைச்

     சிரசுடைந் துதிரஞ் சிந்தச் சினத்துடன் புடைத்து நின்றார்.

17

      (இ-ள்) அப்போது மலைகள் ஒன்றோடொன்று திரட்சியுற்றதைப் போன்ற அழகிய தோள்களையுடைய அரசரான சகுது றலியல்லாகு அன்கு அவர்கள் கோபமானது எல்லை தாண்டியதென்று சொல்லும் வண்ணம் அங்கு கிடந்த ஒரு ஒட்டகத்தி னெலும்பைத் தங்களின் கைகளில் தாங்கி விரைவுடன் சினத்து நின்ற வீரர்களான அந்தக் காபிர்களில் ஒருவனைத் தலையானது உடைந்து இரத்தம் சொரியும்படி கோபத்தோடும் அடித்து நின்றார்கள்.

 

1357. சினத்துட னெதிர்த்த காபிர் திரளையுஞ் சகுது வேந்த

     னினத்தையும் வேற தாக்கி யிவர்க்குறு மொழிகள் சாற்றி

     மனத்தினிற் கோப மாற்றி மனைவயின் புகுதச் செய்தார்

     கனத்தநூன் முறையி னுட்பங் கண்டவல் லவர்க ளன்றே.

18

      (இ-ள்) அந்நேரத்தில் பாரந்தங்கிய நூற்களினது ஒழுங்கின் நுட்பங்களை யறிந்த வல்லவர்களான பண்டிதர்கள் கோபத்துடன்