|
முதற்பாகம்
மனக்குறையானது
ஒழிந்திடும் வண்ணம் நல்ல வார்த்தைகளை எடுத்துச் சொல்ல அவர்களெல்லாவரும் பொறுமையையுடைய
உள்ளத்தோடும் தங்கள் தங்களின் வீட்டின்கண் போய்ச் சேர்ந்தார்கள்.
1371.
மாற்ற லர்க்கரி
முகம்மது காபிர்கள் வணங்கிப்
போற்று புத்தையு
மினத்தையும் பொருந்திலா திகழ்ந்து
தூற்று நிந்தனை
யுரைமறுத் திலர்செழுஞ் சுருதி
தேற்றும் வானவர்
கோனுரை நிலைப்படுந் திறத்தால்.
32
(இ-ள்)
சத்துராதிக ளென்னும் யானைகளுக்குச் சிங்கமாகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள்
செழிய வேதத்தைத் தேற்றா நிற்கும் அமரேசுவரரான ஜபுறயீல் அலைகிஸ்ஸலா மவர்களின்
வார்த்தைகளானவை நிலைபடுகின்ற தன்மையினால் அந்தக் காபிர்கள் தொழுது துதிக்கும்
விக்கிரகங்களையும் அவர்களின் கூட்டத்தையும் இணங்காது நிந்தித்துப் பேசுகின்ற நிந்தனையான
பேச்சுகளை மறுத்திலர்கள்.
1372.
உரைத்த வாசக
மனத்திடை தரித்தில னுரவோர்
நிரைத்த
டைந்தபித் தாலிபுக் குரைத்தது நெகிழ்ந்தான்
குரைத்த
லென்னினி முகம்மது பெலத்தொடுங் குறும்பைக்
கரைத்தல்
வேண்டுமென் றவரவர் தனித்தனி கடுத்தார்.
33
(இ-ள்)
அப்போது காபிர்கள் முகம்மதென்பவன் நாமனைவர்களும் சொல்லிய வார்த்தைகளையும் மனதின்கண்
தரித்திலன். முதியவர்களான நமது கூட்டத்தார்கள் வரிசையாய்ப் போய்ச் சேர்ந்து
அபீத்தாலிபவர்களுக்குச் சொல்லிய வார்த்தைகளையும் விட்டு நீங்கினான். இனி நாம்
குரைப்பதினால் என்ன பிரயோசனம்? அந்த முகம்மதின் வலிமையோடும் குறும்புகளைக் கறையும்படி
செய்தல் வேண்டுமென்று அவர்களொவ்வொருவரும் தனித் தனியாகக் கோபித்தார்கள்.
1373.
கோதில்
கற்பகச் செழுங்கொடிக் கொழுங்கனிக் கதீசா
மாது தன்மணம்
புணர்ந்தவர் பொருடரு மதமோ
சாதி யாசிமென்
குலத்தவர் பெலன்குறித் ததுவோ
வேதி வற்குறுங்
குறும்பெனச் சிலரெடுத் திசைத்தார்.
34
(இ-ள்)
அன்றியும், சில பேர்கள் குற்றமற்ற கற்பகத் தருவின் செழிய கொடியினது கொழுங்கனியாகிய
கதீஜாவென்று சொல்லும் பெண்ணினது விவாகமாய் இசைந்து அவரின் சம்பத்துக்களினால் தரா
நிற்கும் மதமோ? அல்லது தன் சாதியாகிய ஹாஷீமென்று சொல்லப்பட்ட குடும்பத்தவர்களின்
குறித்த வலிமையோ? இந்த முகம்மதுக்குப் பொருந்தும் இக்குறும்புகள் வேறே யாது? என்று எடுத்துச்
சொல்லுவார்கள்.
|