|
முதற்பாகம்
1387.
வருந்தி லாதொரு
சமயமென் றகுமது வடுவைத்
தருந்த
வப்பிழைக் கொடுமுடி தனைமறுத் திலனென்
றிருந்த
பேரினிற் றலைவர்க ளவரவர்க் கிசைத்துத்
திருந்தி லாமனக்
காபிர்கள் கிளையொடுந் திரண்டார்.
48
(இ-ள்)
அப்போது திருந்தாத மனத்தை யுடையவர்களான காபிர்கள் அஹ்மதென்னும் பெயரையுடைய முகம்மதானவன்
வருந்தாது ஒரு மார்க்கமென்று வசையைத் தரா நிற்கும் மிகுத்த குற்றமாகிய கொடுமுடியை
மறுத்திலனென்று அங்குற்றிருந்த ஜனங்களில் தலைவர்களானவர்களுக்குச் சொல்லி, தங்களின்
குடும்பத்தோடும் திரண்டு கூட்டமுற்றார்கள்.
1388.
மாத வத்தின
னொலீதருண் மதலையைக் கொடுபோய்க்
கோதி லாதபித்
தாலிபு திருக்கரங் கொடுத்துத்
தீதி ழைத்திடு
முகம்மதை நமதிடஞ் சேர்த்துப்
பேத கத்தினைத்
துடைப்பமென் றுரைத்தனர் பெரியோர்.
49
(இ-ள்)
அவ்வாறு கூட்டமுற்ற காபிர்களில் பெரியவர்கள் மகாதவத்தையுடையவனான ஒலீதென்பவன் தந்த
மதலையாகிய உமாறத் தென்பவனை யாதொரு குற்றமில்லாது கொண்டு போய் அபீத்தாலிபவர்களின்
அழகிய கைகளிற் கொடுத்து அவனுக்குப் பதிலாகத் தீமை செய்திடும் முகம்மதென்பவனை நமது
இடத்தில் சேரப்பண்ணி அவனுடைய மாறுபாட்டை இல்லாமற் செய்வோமென்று சொன்னார்கள்.
1389.
குறித்த வாசக
நன்கெனத் திரளொடுங் கூடி
நறைத்த டப்புய
வொலீதருண் மகனைமுன் னடத்தி
நிறைத்த
மாமலர்ப் புயனபித் தாலிபு நிலவச்
செறித்த நீணிலை
மணித்தலைக் கடையிடைச் சேர்ந்தார்.
50
(இ-ள்)
அவ்விதம் அந்தக் காபிர்களிற் பெரியவர்கள் குறிப்பிட்ட வார்த்தைகளை யாவர்களும்
நல்லதென்று சொல்லத் தங்களின் கூட்டத்தோடுந் திரண்டு வாசனையமைந்த விசாலமாகிய
தோள்களையுடைய ஒலீதென்பவன் தந்த மகனாகிய உமாறத்தென்பவனை முன்னால் நடத்திக் கொண்டு
பெருமை பொருந்திய புஷ்பமாலைகளினால் நிறைக்கப்பட்ட புயங்களையுடைய அபீத்தாலிபவர்கள்
பிரகாசிக்கும்படி சேர்த்த இரத்தினவர்க்கங்களையுடைய நீண்ட நிலைகளைக் கொண்ட
தலைவாசலின்கண் வந்து சேர்ந்தார்கள்.
|