பக்கம் எண் :

சீறாப்புராணம்

529


முதற்பாகம்
 

கலிவிருத்தம்

 

1390. மாலை யிட்ட வரைப்புய மன்னபித்

     தாலி பைக்கண் டனைவருங் கைமுகிழ்த்

     தோலி டுங்கட லுட்படு நஞ்சினைப்

     போலு மாற்றம் புகலப் பொருந்தினார்.

51

      (இ-ள்) அவ்விதம் வந்து சேர்ந்த காபிர்களான யாவர்களும் புஷ்பமாலை தரித்த மலைபோலுந் தோள்களையுடைய மன்னவரான அபீத்தாலிபவர்களைக் கண்டு இருகைகளையும் குவியும்படி செய்து வணங்கி ஓலமிடா நிற்கும் சமுத்திரத்தி னகம் பொருந்திய விஷத்தைப் போலும் வார்த்தைகளைச் சொல்ல இசைந்தார்கள்.

 

1391. உத்த மத்தொலி தென்பவன் செய்தவப்

     புத்தி ரன்கலை யிற்பொரு வற்றவன்

     சித்தி ரத்தினு மிக்குயர் செவ்வியன்

     மத்த மாகரி யொத்த மனத்தினன்.

52

      (இ-ள்) சத்தியத்தையுடைய ஒலீதென்று சொல்லப்பட்டவன் செய்த தவப்புதல்வனான உமாறத்தென்பவன் சாஸ்திரங்களில் ஒப்பற்றவன். அழகிலும் மிக உயர்ந்த அழகையுடையவன், அன்றியும் பெருமை பொருந்திய மதத்தைக் கொண்ட யானையை நிகர்த்த மனத்தையுடையவன்.

 

1392. மறுவ றுங்குல மைந்தனிம் மைந்தனை

     யறுதி நன்மனத் தோடு மளித்தன

     மிறைவ நின்மக னாக்குக வில்லகத்

     துறைக பின்னு மொருமொழி கேட்டியால்.

53

      (இ-ள்) குற்றமற்ற குலப்புதல்வனாகிய இந்த மைந்தனானவனை நல்ல மனத்தோடும் உங்களுக்குச் சொந்தமாகத் தந்துவிட்டோம். அரசரான அபீத்தாலி பவர்களே! உங்களுடைய புதல்வனாக ஆக்கிக் கொள்ளுங்கள். மேலும் உங்கள் வீட்டின்கண் தங்கியிருந்து கொள்ளுங்கள். இன்னும் ஒரு வார்த்தை கேளுங்கள்.

 

1393. பெறத்த காத பெரும்பழி யாய்நம

     தறத்தி னுக்கழி வாயவ தூறுமாய்

     மறுத்தோர் மார்க்கம் வகுத்த முகம்மதை

     வெறுத்தி னத்தவர்க் கீந்திடல் வேண்டுமால்.

54

      (இ-ள்) பெறத்தகாத பெரிய விரோதமாகவும் நமது புண்ணியத்திற்குக் கேடாகவும் நிந்தனையாகவும் வேறேயொரு மார்க்கத்தை வகைப்படுத்திய முகம்மதென்பவனை நீங்கள் விரோதித்து இனத்தவர்களான எங்களுக்குத் தருதல் வேண்டும்.