பக்கம் எண் :

சீறாப்புராணம்

530


முதற்பாகம்
 

1394. இந்த மாற்ற மிசைந்தினி ரேற்பகை

     வந்தி டாது மறுத்தொரு தீங்கிலைச்

     சிந்தை வேறுசெய் தீரெனி னீள்பகை

     பிந்தி டாத பெரும்பழி சூழுமே.

55

      (இ-ள்) நீங்கள் இந்த வார்த்தைகளைப் பொருந்தினீர்களேயாகில் நம்மில் யாதொரு விரோதமும் வராது. வேறே யொரு தீமையுமில்லை. இதற்குப் பொருந்தாது உங்களுடைய எண்ணத்தை வேறு செய்வீர்களானால் தாமதியாத பெரிய விரோதமானது நம்மை வந்து வளைந்து கொள்ளும்.

 

1395. எனவு ரைத்த வினத்தவர் தம்மொழி

     மனதி னுட்புகுந் தங்கி வளர்த்துறு

     சினமெ ழுப்பின சிந்தையுட் டீயைநன்

     னினைவி னுட்பொதிந் தோர்மொழி நீட்டுவார்.

56

      (இ-ள்) என்று சொல்லிய தங்களின் கூட்டத்தாருடைய வார்த்தைகள் மனசின்கண் நுழைந்து அக்கினியை வளர்த்துப் பொருந்திய கோபத்தை எழும்பும் வண்ணம் செய்தது. அப்போது அபீத்தாலிபவர்கள் அவ்வாறுற்ற மனசின் கண்ணுள்ள அக்கினியை நல்ல எண்ணத்தினால் அகத்திலேயே மூடி ஒரு வார்த்தையை நீளமாய்ச் சொல்லுவார்கள்.

 

1396. நலிவி லாது நடுவுரைத் தீரும

     தொலிது மைந்தனு மாறத்தென் போன்றனை

     மலியும் வெண்சுதை மாடத்துள் வைத்தியான்

     மெலிவி லாது வளர்த்திடல் வேண்டுமால்.

57

      (இ-ள்) நீங்கள் வாட்டமில்லாது நீதியைப் பேசினீர்கள். உங்கள் ஒலீதென்பவனுடைய மகன் உமாறத்தென்பவனை யான் வெண்ணிறத்தையுடைய சுண்ணச்சாந்துகள் மலிந்த வீட்டினகம் வைத்து யாதொரு வருத்தமு மில்லாமல் வளர்க்குதல் வேண்டும்.

 

1397. எங்க டங்குலத் தின்னுயிர்த் தம்பிதன்

     மங்கை யீன்ற மணியை முகம்மதை

     யுங்கள் பாற்கொடு போயுமர் தம்மனப்

     பங்கந் தீரப் படுத்தலும் வேண்டுமால்.

58

      (இ-ள்) எங்கள் குலத்திலுள்ள இனிய உயிர் போன்ற தம்பியாகிய அப்துல்லா வென்பவரின் மனைவி ஆமினாவென்பவள் பெற்ற மாணிக்கமானவரை, முகம்மதானவரை, உங்களிடத்திற் கொண்டு போய் உம்மவர்களுடைய மனத்தின் கண்ணுள்ள பின்னமானது தீரும் வண்ணம் கொலை செய்தலும் வேண்டும்.