பக்கம் எண் :

சீறாப்புராணம்

531


முதற்பாகம்
 

1398. ஈது நந்நெறி யீது மனுநெறி

     யீது நங்குலத் தாருக் கிணங்குவ

     தீது வேதத் துரைப்படி யாவர்க்கு

     மீத லாதுநன் னீதியு மில்லையே.

59

      (இ-ள்) இதுவே நமது ஒழுங்கு. இதுவே மனுநீதி. இதுவே நமது கூட்டத்தாருக்குப் பொருந்துவது. இதுவே வேதத்தினது வசனமுறைமை. இதல்லாமல் யாவர்களுக்கும் நல்ல நீதியும் வேறே யாதொன்றுமில்லை.

 

1399. அறபெ னும்பதி யாரர சூழியோ

     ரறவு நல்லறத் தாலறி வோங்கியோர்

     பிறவு மிவ்வுரை யாவர்கள் பேசுவார்

     பிறரு மில்லாநும் போற்பெரி யோர்களே.

60

      (இ-ள்) அன்றியும், அறபென்று சொல்லும் நகரத்திலுள்ளவர்கள் நெடுங்கால அரசையுடையவர்கள். நல்ல புண்ணியத்தினால் மிகவும் அறிவானது ஓங்கப் பெற்றவர்கள். வேறும் இந்த வார்த்தைகளை எவர்கள் பேசுவார்கள். உங்களைப் போல பெரியவர் மற்றவர்களிலாருமில்லை.

 

1400. உரைத்த லென்னுமர்க் குற்றசொல் லென்மனம்

     பொருத்த மில்லெனப் புண்ணியன் கூறலுந்

     திருத்தி லாதென்கொல் செய்குவ மியாமென

     வருத்த முற்ற மனத்தொடும் போயினார்.

61

      (இ-ள்) ஆதலினால் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியது என்ன? ஆனால் நீங்கள் சொன்னதற்கு விடையாகப் பொருந்திய வார்த்தையானது என்மனம் பொருத்தமில்லை யென்று தருமத்தையுடையவர்களான அவ் வபீத்தாலிபவர்கள் சொன்ன மாத்திரத்தில் அந்தக்காபிர்கள் தங்கள் மனமானது திருந்தாது இனி நாம் யாது செய்வோம்? செய்யு முபாயமொன்று மில்லையே யென்று துன்பமுற்ற இருதயத்தோடும் தங்களின் திசையை நோக்கி நடந்து சென்றார்கள்.

 

1401. கனன்று சென்றற பிக்குலக் காபிர்க

     ளனந்த ரக்குறை சிக்குலத் தாரொடு

     வனைந்த பொற்கழன் மன்னவர் தம்மொடு

     சினந்து தங்க ளினங்க டிரட்டினார்.

62

      (இ-ள்) அறபிக் குலத்தினது காபிர்கள் அவ்வாறு காய்ந்து சென்று தங்களின் அனந்தரத்தையுடைய குறைஷிக் கூட்டத்தாரோடும் அலங்கரித்த அழகிய பாதங்களையுடைய அரசர்களோடும் கோபங் கொண்டு தங்களின் கூட்டங்களைக் கூட்டினார்கள்.