பக்கம் எண் :

சீறாப்புராணம்

537


முதற்பாகம்
 

சொல்லுவான், நான் அவனுடைய தூதனென்று சொல்லுவான், நமது சுவாமிகள் மாறுபாடுபடும் வண்ணம் பேசுவான். பயப்படாது எனக்கு ஒரு வேதமுண்டாயினதென்று சொல்லுவான்.

 

1421. மடுத்த சிந்தை முகம்மதென் போன்றனை

     யடுத்த வன்மொழிக் குள்ளகப் பட்டுநீ

     ரெடுத்த நல்வழி கெட்டெளி மைக்குங்கீழ்ப்

     படுத்த லாகப் படநினை யீரென்பார்.

82

      (இ-ள்) ஆதலால் இவ்விதமாக வஞ்சனையே நிறைக்கப் பெற்ற மனசை யுடையவனான அந்த முகம்மதென்று சொல்லப் பட்டவனை நெருங்கிய கொடிய வார்த்தைகளினுள் அகப்பட்டு நீங்கள் எடுத்த நல்லமார்க்க மானது கெட்டு ஏழைகளுக்குங் கீழாய்ப்படுத்தப்படும் வண்ணம் எண்ணாதீர்க ளென்று சொல்லுவார்கள்.

 

எழுசீர்ச்சந்த விருத்தம்

 

1422. மலித ரும்புகழ் முகம்ம தைக்கொடிய

         வஞ்ச னென்றுபெயர் பேசிய

     வொலிது மக்களு மிழந்து கைப்பொரு

         ளொழிந்து பேறுமுத வாமலே

     நலித ருங்கொடிய நரக டைந்திடுவ

         னென்ன வாதிதிரு நன்மொழி

     யலைவி லாதமரர் கோனி ழிந்தவனி

         யிற்பு கன்றவணி லேகினார்.

83

      (இ-ள்) அப்போது அதிகரியா நிற்கும் கீர்த்தியையுடைய நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைக் கொடுமையையுடைய வஞ்சகனென்று நாமத்தைச் சொல்லிய ஒலீதென்பவன் தன்னுடைய புத்திரர்களையும் இழக்கப் பெற்று கையிலுள்ள திரவியங்களும் அழிந்து யாதொரு பதவிக்கும் உதவாமல் மெலிவைத் தராநின்ற கொடிய நரகலோகம் போய்ச் சேருவானென்று யாவற்றிற்கும் முதன்மையனான ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவின் நன்மை பொருந்திய திருவசனத்தை அமராதிபரான ஜபுறயீல் அலைகிஸ்ஸலா மவர்கள் துன்பமில்லாது ஆகாயத்தை விட்டு மிறங்கி இப்பூலோகத்தின்கண் அந்நபிகள் பெருமானவர்க ளிடத்திற் சொல்லிவிட்டுத் திரும்பவும் அவ்வாகாய லோகத்திற்குச் சென்றார்கள்.