பக்கம் எண் :

சீறாப்புராணம்

543


முதற்பாகம்
 

1434. ஊரி னிற்புகுந்தோ ரொட்ட கத்தெலும்

         புடற்குடர்க் குருதி யூனுலம்

     வாரி வந்தவன் முகம்ம தின்றனி

         மணிப்பு றத்திடை படுத்தலும்

     வேரி யங்கமு தலைம்பு லன்களும்

         வெறுத்தொ டுக்கிய சுசூதினிற்

     பாரி டைப்படிதல் கண்டு தீனிலை

          பகைத்த பாவிக ணகைத்தனர்.

95

      (இ-ள்) அவ்வாறு அனுப்பப்பட்ட காபிரான அவன் ஊரின் கண் புகுந்து ஒரு ஒட்டகத்தின் சரீரத்திலுள்ள எலும்பு, குடல், இரத்தம், தசையின் திரளையாகிய இவைகளை வாரிக் கொண்டு வந்து நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் ஒப்பற்ற அழகிய முதுகின்கண் செறித்த மாத்திரத்தில் அவர்கள் தங்களின் கஸ்தூரி வாசனையை யுடைய சரீரமுதல் பஞ்ச புலன்களையும் வெறுக்கப் பெற்று அடக்கிய சுஜூதில் பூமியின் கண் படிவதைத் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்க நிலைமையை விரோதித்த பாவிகளான அபூஜகில் முதலிந அவர்களியாவர்களும் தங்களின் கண்களினாற் பார்த்துச் சிரித்தார்கள்.

 

1435. பிடரின் மீதுசுமை யுஞ்சு சூதியல்

         பிரிந்தி டாதவ ணுறைந்தது

     மடைய லார்கணகை யோடு நின்றது

         மகம்வெ தும்பவொரு காளைகண்

     டிடைய றாதவசை கொண்ட பாவிக

         னிழைத்த பாதகமி தென்னவே

     யுடைய நாயனபி புதல்வி தம்மிட

       மொதுங்கி நின்றிவை யுரைத்தனன்.

96

      (இ-ள்) அப்போது ஒரு இளம்பருவத்தையுடைய வாலிபன் நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களினது பிடரியின் மேல் சுமையையும், அவர்கள் சுஜூதி னொழுங்கை யகலாது அவ்விடத்தில் தங்கினதையும், சத்துராதிகளான அபூஜகில் முதலிய காபிர்கள் சிரிப்புடன் நிற்பதையும், தனது மனமானது வாடும் வண்ணம் பார்த்து இஃது நடுவில் முடிந்து போகாத வசையைக் கொண்ட பாவிகளாகிய அந்தக் காபிர்கள் செய்த துரோகமென்று சொல்லி நாயனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவினுடைய நபியாகிய அந்நாயகமவர்களின் புத்திரி பாத்திமா றலியல்லாகு அன்ஹா அவர்களிடத்தில் வந்து விலகி நின்று இச் சமாச்சாரங்களைச் சொல்லினான்.