|
முதற்பாகம்
1440.
கதிர்விரிந்
தொழுகு மெய்யெழி னபியைக்
காண்டொறுங் காண்டொறும் வலித்திட்
டெதிரெதிர்
வருவன் விலக்குதற் கமையா
னிங்ஙனஞ்
சிலபக றிரிந்தான்
புதியவன் றூத
ரிவன்றனை நோக்கிப்
பொருவிலாச் செவ்விதழ் திறந்து
பதிபெற
வலித்திட் டிதனிலெண் மடங்காய்ப்
பழிப்பொடுந் திரிகுவை யென்றார்.
101
(இ-ள்)
பிரகாசமானது விரிவுற்று ஒழுகா நிற்கும் சரீரத்தினது அழகையுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்களைப் பார்க்கும் தடவையெல்லாம் அவ்வாறு வலித்துக் கொண்டு முன்னால்
முன்னால் வருவான். விலக்கினாலும் அடங்க மாட்டான். இந்தப்படியாகச் சில பகல் வலித்துக்
கொண்டு திரிந்தான். அப்போது புதிய ஆலத்தையுடையவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் தூதராகிய
அந்நபிகள் பெருமானவர்கள் இந்த அக்கமென்பவனைப் பார்த்துத் தங்களின் ஒப்பற்ற சிவந்த
அதரங்களைத் திறந்து நீ இதில் எட்டுப் பங்காய் வலித்து நிந்தனையோடும் இவ்வுலகத்தில்
பொருந்தும் வண்ணம் திரிகுவாயென்று சொன்னார்கள்.
1441.
பலித்தது நபிதந்
திருமொழி யவன்பாற்
பதின்மடங்
காயின விதழ்வாய்
வலித்தலுங்
கண்கள் சிமிட்டலு முலகில்
வழங்கிலா
வலிப்பெலாம் வலித்துச்
சிலிர்த்தது
முகங்கண் டடுத்தவர் மனங்க
டிகைத்ததும்
பெருங்குல மனைத்துஞ்
சலித்ததுந்
தவிரா இடும்பினால் வருநோய்
படர்ந்தது
வைகலுந் தழைத்தே.
102
(இ-ள்)
அவ்விதம் சொல்லிய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் தெய்வீகமுற்ற
வார்த்தையானது அவனிடத்திற் பலித்தது. அதனால் அவனுடைய உதடுகளும் வாயும் வலிப்பதும் கண்களைச்
சிமிட்டுவதும் முகமானது இந்தவுலகத்தின்கண் வழங்காத வலிப்புகளனைத்தையும் வலித்துச்
சிலிர்ப்பதும் அதைப் பார்த்து நெருங்கிய ஜனங்களின் மனமானது பயங்கர மடைவதும் அவனின் பெரிய
குடும்பத்தார்க ளனைவர்களும் துக்கப்படுவதும் பத்துப் பங்காயின. அன்றியும், ஒழியாத
இடும்பினால் உண்டான அந்நோயானது பிரதிதினமும் ஓங்கிப் படர்ந்தது.
|