பக்கம் எண் :

சீறாப்புராணம்

547


முதற்பாகம்
 

1442. பெறுமவ ரிடத்து மனைவிதன் னிடத்தும்

          வலிப்பது தவிர்ந்திலன் பெரியோர்

     மறுகெதிர்ப் படினு முகத்தெதிர் நோக்கி

          வலித்திட லொழித்திடான் புதியோர்

     சிறுவர்கள் காணி லெவ்விட மனைத்துஞ்

          சிதறியே வெருவிடத் திரிவன்

     குறைவிலா நபியைப் பழித்தநிந் தனையாற்

          குவலயம் பழித்திடத் திரிந்தான்.

103

      (இ-ள்) மேலும், அவன் தன்னை யீன்றவர்களான தாய் தந்தையர்களிடத்திலும் தனது நாயகி யிடத்திலும் வலிப்பதை யொழிந்திலன். தெருவின்கண் பெரியோர்கள் எதிர்ப்பட்டாலும் அவர்களின் முகத்தை எதிராய்ப் பார்த்து வலிப்பதைத் தவிர்த்திலன். தன்னைப் புதிய மனிதர்களும் சிறிய பாலியர்களும் கண்டால் பயந்து எல்லா விடங்களிலும் சிதறும் வண்ணம் திரிவான். இவ்வாறாகக் குறைவற்ற நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை நிந்தித்த நிந்தனையால் இவ்வுலகமானது தன்னை நிந்தித்திடும்படி திரிந்தான்.

 

1443. குருநெறி யவரைக் காண்டொறும் வலிப்பன்

          கோயிலிற் றேவத மிடத்திற்

     சிரசினை வளைத்து முகஞ்சுரித் திருகண்

           சிமிட்டுவ தடிக்கடி மறவான்

     வருநெறி பிழைத்த பாவிகள் குலமும்

           வணங்கிய புத்துக ளனைத்துந்

     தருநபி பழித்துக் காட்டுதற் கிவனோர்

           சாட்சியிற் றலைமைய னானான்.

104

      (இ-ள்) அன்றியும், குருவினது முறைமையை யுடையவர்களைப் பார்க்குந் தோறும் வலிப்பான். கோயிலின் தேவதங்களி னிடத்தில் தனது தலையை வளையச் செய்து முகத்தைச் சுழித்து இரண்டு கண்களையும் சிமிட்டுவதை அடிக்கடி மறக்கமாட்டான். ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவால் வரா நிற்கும் தீனுல் இஸ்லா மென்னும் மார்க்கத்தில் தவறிய பாவிகளான காபிர்களின் கூட்டத்தையும் அவர்கள் தொழுகின்ற விக்கிரகங்களெல்லாவற்றையும் கற்பகத்தருவை நிகர்த்த நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் நிந்தித்துக் காட்டுவதற்கு இந்த அக்கமென்பவன் ஒப்பற்ற காட்சியில் தலைமைத்தனத்தை யுடையவனாயினான்.