பக்கம் எண் :

சீறாப்புராணம்

549


முதற்பாகம்
 

1446. வலிபெற வழங்கும் வலக்கரம் வழங்கா

          தெனமறுப் படிறுரைத் தவனைக்

     கலியென நினைத்துக் கவரிதழ் திறந்தெக்

          காலமு முனதுரைப் படியே

     நிலைபெற நிலத்தி லிருப்பது நிசமென்

          றுரைத்தனர் நெடுமுடி யாதந்

     தலைமுறைப் பெயரின் முதன்மணி விளக்காய்த்

          தருகதிர் நபிமுகம் மதுவே.

107

      (இ-ள்) வலிமை பெறும் வண்ணம் வழங்கா நிற்கும் வலது கையை வழங்கா தென்று குற்றத்தை யுடைய பொய்மையான வார்த்தைகளைச் சொல்லிய அவனை வஞ்சகனென்று நெடிய கிரீடத்தைப் பெற்ற மூலபிதாவான நபி ஆதமலைகிஸ்ஸலா மவர்களின் தலைமுறையையுடைய பேர்களின் முதன்மையையுடைய இரத்தினத் தீபமாகத் தரா நிற்கும் பிரகாசத்தைக் கொண்ட நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்களின் மனசிலெண்ணிப் பிளவை யுடைய இரு வுதடுகளையும் திறந்து நீ உனது சொல்லின் வண்ணம் எந்தக் காலமும் நிலைமை பெறும்படி இந்தப் பூமியின்கண் இருக்கப் பெறுவது சத்தியமென்று சொன்னார்கள்.

 

1447. அடங்கலர்க் கரியா யுதித்தநந் நயினா

         ரறைந்தசொன் மறுத்தவன் வலக்கை

     முடங்கில சிறிது நீண்டில வுணர்வு

         முழுதினு மிலதுகெட் டொடுங்கி

     வடங்கொள்வெம் முலையார் நகைத்தரு வருப்ப

          வருந்தினும் வாய்க்குத வாம

     லிடங்கொளம் புவியு ணோக்குநர்க் கிழிவா

          யிணங்கிலா தொழிந்திருந் ததுவே.

108

      (இ-ள்) சத்துராதிக ளென்னும் யானைகளுக்குச் சிங்கமாக அவதரித்த நமது ஆண்டவர்களான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் சொல்லிய வார்த்தைகளை மறுத்தவனாகிய அந்தக் காபிரின் வலது கையானது கொஞ்சமும் மடங்கிலது அன்றியும், நீண்டிலது. ஆபரணங்களைக் கொண்ட வெவ்விய முலைகளை யுடைய பெண்கள் சிரிப்புற்று அருவருக்கவும் முழுவதும் உணர்ச்சியில்லாது பழுதாகிச் சுருங்கி எதையாயினும் சாப்பிட்டாலும் அவ்வஸ்துவானது வாய்க்கு உதவாமல் இடங்கொண்ட அழகிய இப்பூமியினகம் பார்க்கப்பட்டவர்களுக்கு இணங்காது நிந்தையா யொழிந்திருந்தது.