பக்கம் எண் :

சீறாப்புராணம்

550


முதற்பாகம்
 

1448. மண்ணினிற் செழுந்தீன் பயிர்நலந் தழைக்க

         வளர்த்தமா மறைநபி நயினார்

     கண்ணுடைக் கரும்பின் சுவையினு மினிய

          கட்டுரை நெறிக்கலி மாவை

     யுண்ணிறை யமிர்த மெனவறி யாம

          லொடுங்கிலா தெதிரிடர் பகர்ந்திட்

     டெண்ணிறந் தனையர் சிலபக லிவர்போ

          லிடும்பைநோய் சுமந்திருந் தனரே.

109

      (இ-ள்) இப்பூலோகத்தின்கண் செழிய தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கப் பயிரினது நலமானது தழைக்கும் வண்ணம் வளரச் செய்த மகத்தாகிய வேதங்களினது நயினாரான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களினிடத்திற் பொருந்திய கரும்பினது மதுரத்திலும் அதிக மதுரத்தைக் கொண்ட உறுதியாகிய வார்த்தைகளின் முறைமையையுடைய ழுலாயிலாஹ இல்லல்லாகு முகம்மதுர் றசூலுல்லாஹிழு என்னுங் கலிமாவை மனசின்கண் நிறையப் பெற்ற அமுதமென்று தெரியாமல் அடங்காது முன்னாக இடர்களைக் கூறி அளவற்றவர்கள் இவர்களைப் போல வருத்தத்தைக் கொண்ட நோய்களைச் சில காலம் தாங்கினார்கள்.

 

1449. மறைபடாப் புகழை யுலகினில் வளர்த்து

         வருமொரு துரையபுல் காசீங்

     குறைபடா மனமும் வாக்குமொன் றாகப்

         புகழ்ந்திடுங் குரிசினந் நபிக்கு

     நிறைபட வடுத்த கிளையனைத் தையுந்தீ

         னிலைபெற நிறுத்திடு மென்ன

     விறையவ னாயத் திறங்கிய தெனவங்

         கிருந்திறங் கினர்சிபு ரீலே.

110

      (இ-ள்) அப்போது இவ்வுலகத்தின்கண் மறைவுபடாத கீர்த்தியை வளரும் வண்ணம் செய்த ஒப்பற்ற அதிகாரியாகிய இந்நூலின் கொடைநாயகர் அபுல் காசீம் மரைக்காய ரவர்கள் தங்களின் குறையாத இருதயமும் வார்த்தையு மொன்றாகத் துதித்த குரிசிலான நமது நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்குப் பூரணமாக நெருங்கிய தங்களின் பந்துக்களெல்லாவரையும் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தினது நிலைமையைப் பெறும்படி நிற்கச் செய்யுங்களென்று யாவற்றிற்கும் இறைவனாகிய ஜல்லஜலாலகுவத்த ஆலாவின் ஆயத்தென்னும் வேதவசன மிறங்கிற்றென்று ஆகாயலோகத்தின் கண்ணிருந்து ஜபுறயீல் அலைகிஸ்ஸலா மவர்கள் இப்பூலோகத்தின்கண் இறங்கினார்கள்.