பக்கம் எண் :

சீறாப்புராணம்

556


கல

முதற்பாகம்
 

கலிவிருத்தம்

 

1460. தேந்தரு மினியசொற் செவ்வி நந்நபி

    யாய்ந்தசொ லுணர்ந்திசு லாமி லாகிய

    மாந்தரைப் பிடித்தக மறுக்க முற்றற

    வீய்ந்திட விடர்பல விளைத்திட் டார்களே.

121

      (இ-ள்) அவ்விதம் எண்ணிய அந்தக் காபிர்கள் தேனினது மதுரத்தைப் போலும் தரா நிற்கும் மதுரத்தைக் கொண்ட வார்த்தைகளையுடைய அழகிய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் தேர்ச்சியுற்ற வசனங்களைத் தெளிந்து தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்திலான மனிதர்களைப் பிடித்து மனமானது சுழற்றியடைந்து அற்றுப் போகும் வண்ணம் இறக்கும்படி பல துன்பங்களைச் செய்தார்கள்.

 

1461. வீசுவர் சிலர்தமை விடுத்து நன்மொழி

     பேசுவர் சிலர்தமைப் பிடித்துப் புன்மொழி

     யேசுவர் சிலர்தமை யிரண்டு பட்டுறும்

     பூசலுக் கடிப்படை புணர்த்து வார்சிலர்.

122

      (இ-ள்) அன்றியும், அந்தக் காபிர்களில் சில பேர்கள் இஸ்லாமானவர்களில் சில பேர்களைப் பிடித்து அடிப்பார்கள். சில பேர்கள் அவ்விதம் அடிப்பதைத் தள்ளிச் சிலபேர்களைப் பிடித்து நல்ல வார்த்தைகளைச் சொல்லுவார்கள். சில பேர்கள் சில பேர்களைப் பிடித்துக் கீழ்மையான வார்த்தைகளினால் திட்டுவார்கள். சில பேர்கள் இரண்டுபட்டுப் பொருந்தா நிற்கும் கலகத்திற்கு அடிப்படையை உண்டாக்குவார்கள்.

 

1462. மாயவன் முகம்மது வகுத்த மார்க்கத்தி

     லாயின னிவனென வடுத்தம் மாறையுங்

     கூயவன் றந்தையா சிறையுங் கோதிலாத்

     தாய்சுமை யாவையுந் தமக்கை தன்னையும்.

123

      (இ-ள்) அன்றியும், அவர்கள் இவன் வஞ்சகத்தை யுடையவனான முகம்மதென்பவன் வகைப்படுத்திய மார்க்கத்திலானவனென்று சொல்லி நெருங்கி அம்மா றென்பவரையும் அவரின் தகப்பனார் ஆசிறையும் குற்றமற்ற அவரின் தாய் சுமையாவையும் அவரின் தமக்கையையும் கூப்பிட்டு.

 

1463. பிடித்தனர் சினத்தொடிந் நான்கு பேரையு

     மடித்தன ரிருகர மழுந்த வங்கமுந்

     துடித்திடக் கயிற்றினிற் சுருக்கிப் பாதலம்

     வெடித்திடச் சுடும்பரல் வெயிலி லாக்கினார்.

124