பக்கம் எண் :

சீறாப்புராணம்

557


முதற்பாகம்
 

      (இ-ள்) கோபத்தோடு இந்நான்கு பேர்களையும் பிடித்து அடித்தார்கள். இரண்டு கைகளும் அழுந்தவும் சரீரமும் மனமும் துடித்திடவும் கயிற்றினால் சுருக்கிக் கட்டிப் பாதலமானது பிளந்திடும் வண்ணம் சுடா நிற்கும் பரற்கற்களை யுடைய வெயிலின்கண் ஆகும்படி செய்தார்கள்.

 

1464. ஏங்குவ ரிரங்குவ ரிருக ணீர்விழத்

     தேங்குவ ரடிக்கடி தீனை மாறியு

     நீங்குவ தில்லென நினைத்திட் டுள்ளகம்

     வீங்கிட நெட்டுயிர்ப் பெறிந்து வீழ்குவார்.

125

      (இ-ள்) அவ்விதம் அவர்கள் ஆகும்படி செய்யவே அந்நான்கு பேர்களும் சத்தமிடுவார்கள். இரண்டு கண்களிலுமுள்ள கண்ணீரானது கீழே விழும் வண்ணம் அழுவார்கள். அடிக்கடி பயப்படுவார்கள், தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தை யொழிந்தும் நீங்குவதில்லையென்று மனதின்கண் எண்ணி வீங்கும் வண்ணம் பெருமூச்செறிந்து பூமியில் விழுவார்கள்.

 

1465.  தங்கிய கதிரவன் றழலின் மெய்யொளி

     மங்கியுள் ளீரலும் வறந்து தீய்ந்திடப்

     பங்கிகள் பூழ்தியிற் பதிய மூட்டிய

     வங்கியிற் கிரிமியொத் தறிவு போக்கினார்.

126

      (இ-ள்) அன்றியும் தங்கா நிற்கும் சூரியனின் வெப்பத்தினால் சரீரத்தின் பிரபையானது மழுங்கப் பெற்று அகத்தின் கண்ணுள்ள ஈரலும் காய்ந்து கரிந்து உரோமங்கள் புழுதியிற் பதியும்படி மூட்டப்பெற்ற நெருப்பினது புழுவை நிகர்த்துத் தங்களின் புத்தியையும் போக்கடித்தார்கள்.

 

1466. வேனலிற் கிடந்துடல் வெதும்பிச் செவ்வரி

     பானலத் தருவிநீர் பரப்பி யுள்ளுடைந்

     தூனென வெயர்ப்பெறிந் துதிர நந்நபி

     தீனிலை மறுத்திலர் செவ்வி யோர்களே.

127

      (இ-ள்) அவ்வாறு போக்கடித்த அழகை யுடையவர்களான அந்நான்கு பேர்களும் வேனலின்கண் கிடத்தப்பெற்றுச் சரீரமானது வாடிச் சிவந்த இரேகைகள் படர்ந்த நீலோற்பலமாகிய இருகண்களென்னும் அருவியினது ஜலத்தை எவ்விடங்களிலும் பரவச் செய்து மனமானது தளர்வடைந்து நிணத்தைப் போல வியர்வையை வீசிச் சொரிந்தும் நமது நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்க நிலைமையை நீத்திலர்கள்.