பக்கம் எண் :

சீறாப்புராணம்

599


முதற்பாகம்
 

அஞ்சாதீர்கள். அழகிய தாளினால் செறியப் பெற்ற கதவினது தகவலை விடுங்களென்று மறுத்துஞ் சொன்னார்கள்.

 

1590. அறந்தாங் ககத்தா ரம்சாசொல்

         லறிவு ளிருத்தி மணிக்கதவந்

     திறந்தார் திறந்த மனைநோக்கிச்

         செம்மை குடிகொண் டெழுந்தடல்வெம்

     மறந்தாங் கியபொற் புயத்துமறு

         வந்தார் வரலுஞ் செழுஞ்சோதி

     பிறந்தா ரெழினந் நபிக்குரிசில்

         பிந்தா திருந்தா ரெழுந்தாரே.

88

      (இ-ள்) தருமத்தைச் சுமந்த இருதயத்தை யுடையவர்களான ஹம்சா றலியல்லாகு அன்கு அவர்கள் அவ்வாறு சொல்லிய அறிவாகிய வார்த்தைகளை அங்கிருந்த யாவர்களும் மனசின்கண் இருக்கும்படி செய்து அழகிய கதவைத் திறந்தார்கள். அவ்விதம் திறந்த வீட்டைப் பார்த்து அழகானது குடிகொண்டு ஓங்கிய வலிமையை யுடைய வெவ்விய வீரத்தைத் தாங்கப் பெற்ற பிரகாசமமைந்த தோள்களையுடைய உமறுகத்தா பென்பவர் வந்தார். வந்த மாத்திரத்தில் உட்கார்ந்திருந்தவர்களான செழிய பிரபையானது உதயமா யதிகரித்த அழகிய நமது நபிகள் பெருமான் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தாமதியாது எழும்பினார்கள்.

 

1591. நரந்தங் குலவி மரவமலர்

         நறுந்தேன் குளிக்கும் புயவரையோ

     டுரந்தங் கிடவா ளரியுமறைத்

         தழுவி யொளிருங் கரந்தீண்டி

     யிருந்திங் கிவணில் வரும்வரவா

         றியம்பு மெனக்கென் றெழிலிமுற்றுங்

     கரந்தங் கியநல் லருள்பெருகும்

         கபீபு முகம்ம துரைத்தனரால்.

89

      (இ-ள்) மேகங்கள் முழுவதும் கையின்கண் தங்கப் பெற்றதைப் போன்று நல்ல கொடையானது அதிகரியா நிற்கும் ஹபீபென்னும் காரணப்பெயரை யுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு எழும்பி வாசனையானது உலாவப் பெற்றுக் குங்குமப் புஷ்பத்தினது நறிய தேனில் படிந்த தங்களின் தோள்களாகிய மலைகளோடு வாளாயுதத்தையுடைய சிங்கமான உமறுகத்தா பென்பவரை வலிமையானது தங்கும் வண்ணம் கட்டியணைத்துப் பிரகாசிக்கின்ற அவரின் கையைத் தொட்டுத் தங்கியிருந்து நீவிர் இங்கே வந்த வரலாற்றை எனக்குச் சொல்லுமென்று கேட்டார்கள்.