பக்கம் எண் :

சீறாப்புராணம்

600


முதற்பாகம்
 

1592. வரிசை நபியே முகம்மதுவே

         வானோர்க் கரசே புவிக்கரசே

     யுரிய தனியோன் முதற்றூதே

         யுமது கலிமா வுரைப்படியே

     யரிய மறைதேர்ந் தீமான்கொண்

         டறத்தா றொழுகும் படிகருத்திற்

     கருதி யிவணி லடைந்தேனென்

         றுரைத்தா ருமறு கத்தாபே.

90

      (இ-ள்) அவர்கள் அவ்விதம் கேட்கவே உமறுகத்தா பென்பவர் சங்கையை யுடைய நபியானவர்களே! முகம்ம தானவர்களே! தேவர்களான மலாயிக்கத்து மார்களினது இராஜா வானவர்களே! இப்பூலோகத்தின் கண்ணுள்ள யாவற்றிற்கும் அரசானவர்களே! உரிமையையுடைய தனியவனான ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவின் முதன்மையாகிய றசூலானவர்களே! உங்களின் கலிமாவினது சொற்படி அருமையான புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தைத் தெளிந்து ஈமான் கொண்டு தருமநெறியி லொழுகும் வண்ணம் எனது கருத்தில் நினைத்து இங்கு வந்து சேர்ந்தேனென்று சொன்னார்.

 

1593. கூறுங் கலிமா வுரைத்தீமான்

         கொள்ளும் படிக்கிங் கடைந்தனெனத்

     தேறு மொழிகேட் டகுமதுதஞ்

         செவ்விக் கமல முகமலர்ந்து

     பேறு மிதுவே கிடைத்ததெனப்

         பெரியோ னாதி தனைப்புகழ்ந்து

     மீறுங் களிப்பா நந்தமன

         விழைவாற் றக்கு பீறுரைத்தார்.

91

      (இ-ள்) அவர் அவ்வாறு யாவர்களும் புகழா நிற்கும் கலிமாவை யோதி ஈமான் கொள்ளும் வண்ணம் இங்கு வந்து சேர்ந்தேனென்று சொல்லத் தெளிவுற்ற அவ்வார்த்தைகளை அஹ்மதென்னுந் திருநாமத்தை யுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்களின் காதுகளினால் கேள்வியுற்று அழகிய தாமரை மலர் போன்ற முகமானது மலரப் பெற்று நாம் பெற வேண்டிய பேறும் இதுதான். அதுவே நமக்குக் கிடைத்ததென்று சொல்லிப் பெரியவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவைத் துதித்து மனசின்கண் அதிகரியா நிற்கும் சந்தோஷமாகிய ஆனந்தத்தினது பெருக்கத்தினால் ழுஅல்லாகு அக்குபற்ழு என்னும் தக்குபீறைச் சொன்னார்கள்.