பக்கம் எண் :

சீறாப்புராணம்

601


முதற்பாகம்
 

1594. வல்லோ னபியுங் கலிமாவை

         வகுத்துக் காட்டி முன்னுரைப்பச்

     செல்லேர் கரத்தா ருமறுகத்தாப்

         செப்பி யிசுலா நெறிதேக்கி

     யல்லார் குபிரைக் கடிதகற்றி

         யழியாத் தொழுகை முறைபடித்து

     நல்லோர் பரவும் படிவணங்கி

         நறுந்தீ னடுக்கந் தனைத்தவிர்த்தார்.

92

      (இ-ள்) அவ்வாறு தக்குபீறு சொன்ன வல்லவனான ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவின் நபியாகிய முகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் கலிமாவை வகைப்படுத்திக் காட்டி முன்னர் ஓதவே மேகத்தைப் போன்ற அழகிய கைகளை யுடையவரான உமறுகத்தாபென்பவர்களும் பின்னர் ஓதித் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தினது ஒழுங்குகளை மனசின்கண் நிறையும்படி செய்து அந்தகாரமானது அதிகரித்த கடியதான குபிரென்னும் மார்க்கத்தை யொழித்துக் கெடாத தொழுகையினது முறைமைகளைக் கற்று நல்லவர்களாகிய மற்றும் முஸ்லிம்கள் வணங்கும் வண்ணம் ஜல்லஜலாலகு வத்த ஆலாவை வணங்கி நன்மை பொருந்திய தீனுல் இஸ்லா மார்க்கத்தினது அச்சத்தை யொழித்தார்கள்.

 

1595. விரியுங் கதிர்மெய்ச் சிறைத்தடங்கண்

         விண்ணோர்க் கரசர் பொருப்பினிருந்

     தருவி யெனச்செய் திடுங்கலிமா

         வடங்கா நதியின் பெருக்காக்கிச்

     சுருதி மொழித்தீன் பயிர்தழைப்பச்

         சுற்றுங் குபிர்வெங் களைதீய்க்குங்

     குருவி னெறியான் மனங்களிப்புக்

         கொண்டா ரீமான் கொண்டாரே.

93

      (இ-ள்) அப்போது ஈமான் கொண்டவர்களாகிய முஸ்லிம்களியாவர்களும் விரிந்த பிரகாசமமைந்த சிறகுகளை யுடைய சரீரத்தையும் பெரிய கண்களையு முடைய அமரேசுவரரான ஜபுறயீல் அலைகிஸ்ஸலா மவர்கள் அந்த ஹிறாமலையின்கண் தங்கியிருந்து அருவியைப் போலச் செய்திடும் கலிமாவை அமையாத ஆற்றினது பெருக்கமாகிப் புறுக்கானுல் அலீமென்னும் வேதவாக்கியத்தையுடைய தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கப் பயிரானது தழைக்கும் வண்ணம் வளைந்த குபிராகிய வெவ்விய களையைத் தீயும்படி செய்யும் குருவான நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் நீதியினால் மனமானது சந்தோஷமடையப் பெற்றார்கள்.