பக்கம் எண் :

சீறாப்புராணம்

603


முதற்பாகம்
 

உடும்பு பேசிய படலம்

 

கலிவிருத்தம்

 

1598. வடிவுறு முமறெனும் வள்ள னந்நபி

     யுடனுயர் தீனிலைக் குரிய ராயபின்

     றிடமுடைத் தவர்களாய்ச் சிந்தை யிற்பெறு

     மடமக றரப்பெரு மகிழ்ச்சி யெய்தினார்.

1

      (இ-ள்) நமது நாயகம் நபியுற்றஹ்மத்து செய்யிதுல் கவ்னைன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களோடு அழகானது பொருந்தப் பெற்ற உமறு கத்தாபென்று சொல்லும் வள்ளலானவர்களும் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்க நிலைமைக்குச் சுதந்தரர்களான பின்னர், முஸ்லிம்க ளியாவர்களும் தைரியமுடையவர்களாய் மனசின்கண் கொண்ட மடமையானது அகலும் வண்ணம் பெரிய சந்தோஷத்தை யடைந்தனர்கள்.

 

1599. செயிரறுந் தீனிலைக் குரிய செவ்விய

     பயிரென வருங்கலி மாவைப் பண்பொடு

     நயனுறப் பெருக்கிய நண்ப ரியாவரு

     முயிரென முகம்மதை யுவந்து காமுற்றார்.

2

      (இ-ள்) அன்றியும், குற்றமற்ற தீனுல் இஸ்லாமென்னும் மார்க்க நிலைமைக்கு உரித்தான அழகிய பயிரைப் போன்று வந்த ழுலாயிலாஹ இல்லல்லாகு முகம்மதுர் றசூலுல்லாஹிழு யென்று சொல்லும் கலிமாவைத் தகுதியுடன் நன்மையுறும் வண்ணம் மனசின்கண் பெருகச் செய்த நேசர்க ளெல்லாவர்களும் நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைத் தங்களின் ஜீவனைப் போல விரும்பி மோகமுற்றார்கள்.

 

1600. உடலுயி ரெனவுவந் துறையு நாளினி

     லடலபூ பக்கரு மலியுந் தெவ்வரைக்

     கடவிய வேற்கர வுமறுங் கள்ளவிழ்

     மடறிகழ் மாலிகை யறபி மன்னரும்.

3

      (இ-ள்) அவ்வாறு சரீரத்தையும் ஆவியையும் போல விரும்பித் தங்கா நிற்கும் தினத்தில் வலிமையை யுடைய அபூபக்கர் சித்தீகு