பக்கம் எண் :

சீறாப்புராணம்

605


முதற்பாகம்
 

1604. கானகத் துற்றகா ரணங்க ளியாவையுந்

     தீனவர் செவியுறத் தேக்கிச் சீர்பெற

     வானவர் புகழ்தர மக்க மாநபி

     யீனமின் மனையகத் தேகி னாரரோ.

7

      (இ-ள்) அப்போது மக்கமா நகரத்தை யுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்திற் குரியவர்களான முஸ்லிம்கள் அந்தக் காட்டின் கண் பொருந்திய காரணங்க ளெல்லாவற்றையும் தங்களின் காதுகளிற் பொருந்தும் வண்ணம் நிறையும்படி கேட்டுச் சிறப்பைப் பெறவும், தேவர்களான மலாயிக்கத்துமார்கள் துதிக்கவும், குறைபாடற்ற தங்களின் வீட்டின் கண் போய்ச் சேர்ந்தார்கள்.

 

1605. அற்றையிற் போழ்தவை யகன்று பின்னைநாள்

     வெற்றிவெங் கதிரயில் வீர ரியாவருஞ்

     சுற்றிட மெய்யெழி றுலங்க மானபி

     மற்றொரு தலத்திடை வைகி னாரரோ.

8

      (இ-ள்) அவ்வாறு பெருமை பொருந்திய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அன்றைய தினம் தங்களின் கூட்டத்தை நீங்கி மறுநாள் விஜயத்தையும் வெவ்விய பிரகாசத்தையுங் கொண்ட வேலாயுதத்தையுடைய வீரர்களான முஸ்லிம்களனைவர்களும் தங்களை வளையும் வண்ணம் தங்களின் சரீரத்தினது பிரகாசமானது ஒளிரும்படி வேறேயொரு தலத்தின் கண் போய்த் தங்கியிருந்தார்கள்.

 

1606. நல்லறி வுடையவர் சூழ நந்நபி

     யில்லிருந் தெழுந்திவ ணிருப்ப மற்றொரு

     வில்லினன் வலையினன் வேடன் கையினிற்

     கல்லிய தடியொடுங் கானி லேகினான்.

9

      (இ-ள்) நல்ல அறிவையுடையவர்களான முஸ்லிம்கள் சூழும் வண்ணம் நமது நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு வீட்டின் கண்ணிருந் தெழும்பி இவ்விடத்தில் தங்கியிருக்க, கோதண்டத்தையும் வலையையுமுடையவனான

வேறேயொரு வேடன் தனது கையில் பூமியைக் கல்லுகின்ற தடியுடனும் காட்டின் கண் சென்றான்.

 

1607. கானகஞ் சுற்றியுங் கல்லைத் தள்ளியு

     மானினந் தடைபட வலைகள் வீக்கியுந்

     தான்மலை முழைஞ்சினுந் தடவி நோக்கியு

     மூன்புசித் திடுவதற் கொன்றுங் காண்கிலான்.

10