பக்கம் எண் :

சீறாப்புராணம்

608


முதற்பாகம்
 

கலிமாவைச் சொல்லி உனது துரோகத்தை இல்லாமற் செய்து நல்ல பதவியை அடைவாயென்று யாவற்றிற்கு முதன்மையனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் றசூலான நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் சொன்னார்கள்.

 

1615. தெரிதர நன்மொழி தெளித்த நந்நபி

     மரைமலர்ச் செவ்விய வதன நோக்கிநும்

     முரைமறுத் திலனெனக் குண்மை யாகவித்

     தரையினி னபியெனச் சாட்சி வேண்டுமால்.

18

      (இ-ள்) அவ்வாறு நல்ல வார்த்தைகளைத் தெரியும் வண்ணம் தெளித்துச் சொன்ன நமது நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் தாமரைமலர் போன்ற அழகிய முகத்தை அந்த வேடன் பார்த்து யான் தங்களுடைய வார்த்தைகளை மறுக்கவில்லை. எனக்கு இப்பூலோகத்தின்கண் தாங்கள் நபியென்று சொல்லும்படி மெய்யாக சாட்சி வேண்டுமென்று சொன்னான்.

 

1616. கானிடை யறபியிவ் வுரையைக் காட்டலுந்

     தேனகு மலர்ப்புயச் செவ்வி நன்னபி

     வானிடை மண்ணிடைப் படைப்பின் மற்றதி

     லீனமில் கரியுனக் கியைவ தேதென்றார்.

19

      (இ-ள்) அந்தக் காட்டின்கண் அறபியாகிய அவ்வேடன் இந்த வார்த்தைகளை வெளிப்படுத்தின மாத்திரத்தில் தேனானது பிரகாசியா நிற்கும் மலர்மாலையணிந்த தோள்களையுடைய அழகிய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் வானலோகத்தின் கண்ணும் பூலோகத்தின் கண்ணுமுள்ள படைப்பையுடையவைகளில் குறைபாடற்ற சாட்சியாக உனக்குப் பொருந்துவது யாதென்று கேட்டார்கள்.

 

1617. கடும்பரற் கான்கவிழ் வலையி னுட்படு

     முடும்பென திடத்திலொன் றுளது முள்ளெயி

     றிடும்பகு வாய்திறந் தினிதி னாகநும்

     மொடும்பகர்ந் திடின்மறுத் துரைப்ப தில்லையே.

20

      (இ-ள்) அவ்விதம் கேட்கவே வேடன் கடிய பரற்கற்களையுடைய காட்டின்கண் கவிழ்த்திய வலையினது அகத்தில் அகப்பட்ட ஓருடும்பானது என்னிடத்திலுள்ளது. அவ்வுடும்பு தனது கூர்மையாகிய பற்களைத் தரித்த பிளந்த வாயைத்திறந் தின்பமாக உங்களுடன் பேசினால் அதை யான் மறுத்துச் சொல்லுவது வேறே யாதொன்று மில்லையென்று சொன்னான்.