பக்கம் எண் :

சீறாப்புராணம்

663


முதற்பாகம்
 

அதிபதியாகிய ஹபீபென்பவன் அன்புடன் குளிர்ச்சி தங்கிய சந்திரனைப் போலும் பிரகாசியா நிற்கும் தனது சிவந்த முகமானது இலங்கும் வண்ணம் இருகாதுகளினாலும் கேள்வியுற்று மகிழ்ச்சியினால் தனது தலையை அசைத்துச் சொல்ல ஆரம்பித்தான்.

 

1769.இந்நகரி யிற்றலைவ ரியாவரினு மிக்கோய்

    மன்னுகிளை யிற்பகை வரத்தவிர்தல் செய்யா

    தன்னவர் துணிந்தவை துணிந்தனை யறத்தோ

    ருன்னவு மிழுக்கென வுளத்திலிவை கொள்ளார்.

19

      (இ-ள்) இந்த மக்கமாநகரத்தின் கண்ணுள்ள தலைவர்களியாவரிலும் மேலான அபீத்தாலிபே! குடும்பத்தினுள் பொருந்திய பகையானது வர; அப்பகையை யொழித்தல் செய்யாது அப்பகைக்குக் காரணமாகிய அவர்கள் துணிந்தவைகளில் நீயும் துணிவுற்றாய். இவற்றைத் தருமவான்கள் நினைப்பதுங்கூடக் குற்றமென்று கருதி மனசின்கண் நினையார்கள்.

 

1770.சீலமறி யாதசிறி யோர்கள்பிழை செய்யின்

    மேலவர்கள் கண்டவை விலக்கல்கட னல்லாற்

    கோலிய பெரும்பகை குலத்தினில் விளைத்தன்

    மாலுற வளர்த்தன்மட மைத்தகைமை யாமால்.

20

      (இ-ள்) நல்லொழுக்க மின்னதென் றுணராத சிறியவர்கள் குற்றஞ்செய்தால் அக்குற்றத்தை மேலோர்கள் பார்த்து அவ்விதம் அவர்கள் செய்யாது அவர்களை அவற்றில் நின்றும் விலக்கி விடுவது கடமையே அல்லாது சூழ்ந்த குடும்பத்தின்கண் அவர்கள் பெரிய பகையை விளையச் செய்வதும் அதைப் பெருமையுற வளரச் செய்வதும் அறியாத் தன்மையாகும்.

 

1771.ஆதியொரு வன்றனிய னுண்டெனவ வன்றன்

    றூதனபி யானளவில் சோதியுரை யான

    வேதமென தின்சொலென விஞ்சையின் விளைத்த

    பேதமொழி வஞ்சமொடு பேசுவது மன்றே.

21

      (இ-ள்) யாவற்றிற்கும் முதன்மையாகிய ஏகனான கடவுள் ஒருவன் உண்டென்றும், யான் அக்கடவுளின் தூதனாகிய நபி என்றும், அளத்தலற்ற பிரகாசமே சொரூபமாய்க் கொண்ட அக்கடவுளின் வார்த்தைகளாகிய வேதமானது எனது வாயில் நின்று முண்டாகும் இனிய வார்த்தைகளென்றும், மாயாஜாலத்தினால் உற்பத்தி செய்த மாறுபாடான வார்த்தைகளைக் கபடத்தோடு கூறுவதையும்.