பக்கம் எண் :

சீறாப்புராணம்

665


முதற்பாகம்
 

தமது மனசின்கண் மகிழ்ச்சி கொண்டு இவ்வார்த்தைகள் நல்லதென்று மிகவுமெடுத்து வியந்து ஒருவனைத் தூதாய்த் தனியே அழைத்தார்.

 

1776.மங்குறவ ழுங்கவிகை வள்ளலை விரிந்த

    பங்கயப தக்குரிசி லைப்பரிவி னோடு

    மிங்கினித ழைத்துவரு கென்றனர் விரைந்தே

    பொங்கிய புயங்கள்புள கங்கொள வெழுந்தான்.

26

      (இ-ள்) அவ்வாறு அழைத்த அவனை மேகங்கள் தவழா நிற்கும் குடையினையுடைய வள்ளலும், மலர்ந்த தாமரை மலர் போலும் திருவடிகளையுடைய குரிசிலுமாகிய நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை அன்போடும் விரைவாய் இனிமையுடன் இவ்விடத்திற்குக் கூட்டிக் கொண்டு வருவாயாக என்றனர். அத்தூதுவனும் ஓங்கிய இருபுயங்களும் புளகம் கொள்ளும் வண்ணம் அங்கிருந்து மெழும்பினான். 

 

1777.ஊதையை நிகர்த்தகதி யொண்புரவி மேற்கொண்

    டேதமறு மாநகர வீதியிடை புக்கி

    யாதமுத லானநபி நாயகம னாதி

    தூதுவரை வந்தநர தூதனெதிர் கண்டான்.

27

      (இ-ள்) அவ்வாறு எழும்பி வந்த நரதூதுவனாகிய அவன் காற்றைப் போலும் நடக்கும் நடையினையுடைய ஒள்ளிய ஒரு குதிரையின் மீதேறிக் குற்றமற்ற மகத்தாகிய அந்த மக்கமாநகரத்தினது வீதியின்கண் நுழைந்து சென்று ஆத மலைகிஸ்ஸலா முதலிய எல்லா நபிமார்களின் நாயகமும் ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவின் தூதுவருமான நபிமுகம்மது முஸ்தபாறசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை எதிரிற் கண்டான்.

 

1778.கண்டுகடி திற்பரி யிழிந்திருகை யார

    முண்டக மலர்ப்பத மிருத்திமுடி மீது

    கொண்டுற வணங்கிநய னங்கள்களி கூர

    வண்டென மலர்க்கர வனப்பினை நுகர்ந்தான்.

28

      (இ-ள்) அவ்விதம் கண்டு விரைவாய்த் தானேறியிருக்கும் குதிரையை விட்டும் கீழிறங்கி நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் தாமரை மலர்போலும் பாதங்களைத் தனது இருகைகளாலும் பொருந்தும் வண்ணம் சிரமீது இருக்கச் செய்து மிகவும் பணிந்து கண்களானவை அதிகக் களிப்படைய வண்டையொத்து நளின மலரை நிகர்த்த கைகளின் அழகை அருந்தினான்.