பக்கம் எண் :

சீறாப்புராணம்

667


முதற்பாகம்
 

வார்த்தையைச் சொன்னார்களென்று சொன்னதைத் தரும நெறியையுடைய நமது நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தெளிந்து பெருமையுடன் மகிழ்ச்சி கொண்டு வாசனை தங்கிய புஷ்பங்களினால் பொதியப் பெற்ற இரத்தினங்களழுத்திய தங்களின் மாளிகையினுள் நுழைந்தார்கள்.

 

1783.மாசகல வந்தகுல மாதினை விளித்துப்

    பாசன் அபில் கக்கமொடு பற்பல ருடன்று

    பூசலை நினைத்தெழுதி விட்டதும் புரிந்தே

    யாசில்திமஸ் கிக்கிறை யடைந்ததுவு மன்றே.

33

      (இ-ள்) அவ்விதம் நுழைந்த நாயகமவர்கள் குற்றமானது நீங்கும் வண்ணம் வந்த மேன்மையையுடைய தங்களின் நாயகியவர்களை அழைத்துப் பாதகனாகிய அபுல்ஹக்க மென்னும் இயற்பெயரையுடைய அபூஜகிலோடு அனேகர்கூடி யுத்தத்தைக் கருதி ஓலை யெழுதிவிட்டதையும், களங்கமற்ற திமஸ்கு நகரத்தினது அதிபதியாகிய ஹபீபென்பவன் வந்து சேர்ந்ததையும்.

 

1784.துன்றுமடல் வெம்புரவி சேனைபுடை சூழ

    வன்றிறல மச்சரொடி ருந்துமதி வல்லோன்

    வென்றிகொ ளயிற்படை யொருத்தனை விடுத்தே

    யொன்றிய மறத்தொடு மழைத்தது முரைத்தார்.

34

      (இ-ள்) அறிவில் வல்லவனான அவ்ஹபீபென்பவன் தன்னை நெருங்கிய வீரத்தன்மையைப் பெற்ற கொடிய குதிரைகளையுடைய சேனைகள் பக்கத்தில் சூழும் வண்ணம் வன்மை பொருந்திய வெற்றியினது மந்திரிமார்களுடன் இருந்து கொண்டு விஜயத்தைக் கொண்ட வேலாயுதத்தைத் தாங்கிய ஒரு தூதுவனை அனுப்பித் தங்களை யச்சபைக்கு நெருங்கிய கொடுமையுடன் அழைத்ததையும் கூறினார்கள்.

 

வேறு

 

1785.மறத்திகன் மனத்தவர் திரண்டு மாநகர்ப்

    புறத்திருந் தழைத்தன ரென்னும் புன்மொழி 

    நறைத்தடப் புயநபி நவிலக் கேட்டலு

    நிறைத்தகற் புடைமையா ரறிவு நீங்கினார்.

35

      (இ-ள்) நிறைக்கப் பெற்ற கற்பென்னும் ஆபரணத்தையே தங்களுக்கு அணிகலமாக அணிந்து கொண்டிருக்கப்பட்டவர்களான கதீஜா நாயகியவர்கள் மகத்தாகிய அம்மக்கமா நகரத்தினது பக்கத்தில் கொடிய பகையைக் கொண்ட மனத்தையுடைய சத்துராதிகள் கூட்டமாய்க் கூடியிருந்துக் கொண்டு