பக்கம் எண் :

சீறாப்புராணம்

670


முதற்பாகம்
 

      (இ-ள்) அன்றியும், கொதித்தலானது நெருங்கப் பெற்ற காபிர்களென்னும் சத்துராதிகளின் கூட்டத்தை ஆரவாரத்தோடும் அடரா நிற்கும் தீனுல் இஸ்லாமென்னும் படைக்கலத்தினது ஆக்கத்தைப் போல, நமக்கெதிர்ப்படுகின்ற வருத்தமென்னு மந்தகாரத்தை மனமகிழ்ச்சியையுடைய மதிப்பென்னும் சூரியனால் மாயும்படி செய்தல் வேண்டும்.

 

1793. தன்மமே பொருளெனத் தவத்தின் மேற்செலு

      நன்மனத் தவர்க்கொரு நாளுந் தீங்கெனும்

      புன்மைவந் தடைந்திடா தென்னப் பூவினின்

      முன்மறை தெளிந்தவர் மொழிந்த வாய்மையே.

43

      (இ-ள்) அன்றியும், தருமமே தனமென்று சொல்லித் தவத்தின் மீது செல்லா நிற்கும் நன்மை பொருந்திய மனத்தையுடையவர்களுக்கு ஒரு நாளேனும் தீமையென்று சொல்லப்பட்ட புன்மையானது வந்து சேராதென்று இவ்வுலகத்தின்கண் முன்னுள்ள வேதங்களைக் கற்றுத் தெளிந்த வேதாந்திகள் கூறிய சத்தியமாகும்.

 

1794. இன்னை பலமொழி யியம்பிக் கற்பெனு

      நன்னிலைக் கொடிமன நடுக்கந் தீர்த்தொரு

      மின்னகத் திருந்தெழு மேக நீழலிற்

      பொன்னணி முன்றிலின் புறத்தி லாயினார்.

44

      (இ-ள்) இப்படிப்பட்ட பல நீதிவாக்கியங்களைக் கூறிக் கற்பென்னும் நல்ல நிலைமையையுடைய கொடி போல்பவரான கதீஜா ரலியல்லாகு அன்ஹா அவர்களின் மனத்தினது பயத்தைத் தீர்த்துப் பிரகாசந்தங்கிய தங்களின் மாளிகையிலிருந்து ஓங்கா நிற்கும் ஒப்பற்ற மேகநிழலில் பொன்னினாற் செய்த ஆபரணங்கள் கிடக்கப் பெற்ற முற்றத்தின் பக்கத்தி லாயினார்கள்.

 

1795. உள்ளகக் களிப்பொடு முவந்து நந்நபி

      விள்ளரும் விசும்பினி னோக்க வெள்ளிடைத்

      தெள்ளிய பெருஞ்சிறைச் செபுற யீல்தமைக்

      கள்ளவிழ் தாமரைக் கண்ணுற் றாரரோ.

45

      (இ-ள்) அவ்விதம் முற்றத்தின் பக்கத்திலான நமது நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் மனசினுள் மகிழ்ச்சியோடும் உவப்புற்றுக் கூறுதற்கரிய ஆகாயத்தைப் பார்க்க, அவ்வாகாயத்தினது வெள்ளியதானத்தில் தெளிவாகிய பெரிய சிறகுகளையுடைய ஜிபுரீல் அலைகிஸ்ஸலாமவர்களை மதுவையுடைய மலர்ந்த தாமரை மலருக்கு நிகரான தங்களின் கண்களாற் கண்டார்கள்.