பக்கம் எண் :

சீறாப்புராணம்

68


முதற்பாகம்
 

சத்தியத்தினது சன்மார்க்கஞ் சேர்ந்த எறுதென்பவரினிடத்தில் தங்கி இனிமையுடன் பிரகாசித்தது.

 

     138. வடவரை குலுங்க நடமிடு துரங்க

              மன்னவ னெறுதுதன் மதலைக்

         கடகரிக் குவட்டி னிணையெனப் பணைத்த

              கதிர்முலைத் துடியிடை மடவார்

         விடமெனக் கரிய கொலைவிழிக் கணங்கள்

              வீற்றிருந் திடுமலர்ப் புயத்தா

         னிடிமுர சதிரு முன்றிலா னுகுநூ

              கிடத்தினி லிருந்திலங் கியதே.

40

     (இ-ள்) மகாமேருப் பருவதமானது குலங்கும் வண்ணம் நடனமிடுகின்ற குதிரைகளையுடைய அரசரான அந்த எறுதென்பவரின் புத்திரரும் மதத்தைப் பொழிகின்ற யானைகளின் கொம்பினது இணையென்று கூறும்படி பருத்த ஒள்ளிய முலைகளையும் உடுக்கைபோலும் இடையையுமுடைய மாதர்களின் விஷத்தை நிகர்த்த கரிய நிறத்தையுடைய கொலைத் தொழிலிற் பழகிய கண்களினது கூட்டங்கள் வீறுடன் தங்கியிருக்கும் புஷ்பமாலைகளை யணிந்த தோள்களையுடையவரும் இடியைப் போன்ற முரசமானது ஒலிக்கின்ற முற்றத்தையுடையவருமான உகுநூ கென்பவரிடத்தில் அவ்வொளிவானது இருந்து பிரகாசித்தது.

 

     139. கடலெனத் தானை யரசர்வந் தீண்டிக்

              கைகுவித் திருபுற நெருங்கச்

         சுடர்மணித் தவிசி னுயர்ந்தர சியற்றிச்

              சுருதிநே ருறையுகு நூகு

         புடையிருந் தவன்செய் யறமெலாந் திரண்டோர்

              புத்திர வடிவெடுத் தென்ன

         விடுகொடை கவிப்பப் புரந்தசே யிதுரீ

              சிடத்தினி னிறைந்திருந் ததுவே.

41

     (இ-ள்) சமுத்திரத்தைப் போலும் சேனைகளையுடைய மன்னவர்கள் வந்து கூடித் தங்களின் கரங்களைக் குவியச் செய்து இரண்டு பக்கங்களிலும் செறியும் வண்ணம் பிரகாசத்தைக் கொண்ட இரத்தினங்களைப் பதிக்கப் பெற்ற சிங்காசனத்தின் மீது ஓங்கி அரசு செய்து வேதங்களினது ஒழுங்கில் தங்கியிருந்த அந்த உகுநூ கென்பவரிடத்திலிருந்து அவர் செய்த புண்ணியங்கள் அனைத்துங் கூடி ஓர் புத்திரரின் சொரூபத்தை எடுத்தாற்போன்று இடுகின்ற சந்திர வட்டக்குடையானது கவிக்கும் வண்ணம் அரசாட்சி செய்த மைந்தர் நபி இதுரீசு அலைகிஸ்ஸலா மவர்களிடத்தில் பூரணப்பட்டிருந்தது.